லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்.பி.க்கள் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உயிரிழந்தார். தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணியின்உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவை சேர்ந்த 5 எம்.பி.க்கள் உட்பட 7 பேர் குழு அனுமதி கோரியது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட சீன அதிகாரிகள் மீது இங்கிலாந்து அரசு தடை விதித்தது.
இதற்கு பதிலடியாக இங்கிலாந்தின் 9 தனி நபர்கள், 4 நிறுவனங்களுக்கு சீன அரசு தடை விதித்தது. சீனாவில் தடை விதிக்கப்பட்ட 9 தனி நபர்களில் இங்கிலாந்தில் தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் சர் இயான் டங்கன் ஸ்மித்தும் ஒருவர். மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்களையும் தடை பட்டியலில் சீனா சேர்த்துள்ளது. தடை காரணமாக இவர்கள் சீன அரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நுழைய முடியாது.
இந்த விவகாரத்தின் எதிரொலியாக சீன எம்.பி.க்கள் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “சீன குழுவுக்கு அனுமதிமறுக்கப்பட்டதாக எங்களுக்கு அதிகாரபூர்வமாக தகவல் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அரசு ராஜ்ஜியரீதியிலான நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும்” என்று கூறினார்.
இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, “ராணியின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வளாகத்தில் நுழைய நாடாளுமன்ற சபாநாயகர் சர் லிண்சே ஹோய்லேவிடம் அனுமதி பெற வேண்டும். சீன குழு விவகாரத்தில் அரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது” என்று விளக்கம் அளித்தன.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு இங்கிலாந்து அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் அழைப்பு கடிதம் சென்றுள்ளது. ஆனால் அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரியா, பெலாரஸ், மியான்மர், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. வரும் 19-ம் தேதி வரை சுமார் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.