ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் நடித்த ‘லைகர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பான் இந்தியா படமக வெளியான ‘லைகர்’ மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
லைகர் திரைப்படத்தால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படம்
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் டோலிவுட்டில் பிரபலமான விஜய் தேவரகொண்டா, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். யார் கண்ணு பட்டதோ, முதன்முறையாக பான் இந்தியா படம் என லைகரில் கமிட் ஆனார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போது, அசுரத்தனமாக வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. சிக்ஸ் பேக், குத்துச்சண்டை வீரர் என விஜய் தேவரகொண்டா ஜிம்மில் இருந்தபடியே குடும்பம் நடத்தினார். இதெல்லாம் போதாதென்று ஹாலிவுட்டில் இருந்து மைக் டைசனையும் அழைந்து வந்தனர்.
வெளியாகும் முன்பே பாய்காட் சிக்கலை எதிர்கொண்ட லைகர்
ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து நன்றாக சென்றுகொண்டிருந்த லைகர் திரைப்படம், ப்ரோமோஷன் நேரத்தில் புதிய பிரச்சினையில் சிக்கியது. பாலிவுட் பிரபலங்களுக்கு எதிரான பாய்காட் குறித்து நெட்டிசன்களை காட்டமாக விமர்சித்த விஜய் தேவரகொண்டா, அவராகவே போய் அந்த வலையில் சிக்கிக் கொண்டார். இதனால், அவரையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள், லைகர் படத்தையும் பாய்காட் செய்தனர். இதனால், லைகர் வெளியாகும் முன்னரே பாதி தோல்வி உறுதியாகிவிட்டது.
விரட்டி விரட்டி வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்
இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி லைகர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே பாய்காட் சிக்கல்கள் தலை மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்க, படுமோசமான மேக்கிங், திரைக்கதையால் வெளியான முதல் நாளே மண்ணை கவ்வியது லைகர். இதனால், விஜய் தேவரகொண்டா உட்பட மொத்த படக்குழுவினரும் அப்செட் ஆகினர். பாய்காட்டால் எங்களை எதுவும் செய்ய முடியாது என எவிஜய் தேவரகொண்டாவும் வீராப்பு பேசியிருந்தார். கடைசியில் மொத்தமும் புஷ்வானமாகிப் போனது.
போர்க்கொடி தூக்கிய தெலுங்கு விநியோகஸ்தர்கள்
லைகர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதால், செம்மையாக லாபம் சம்பாதிக்கலாம் என தெலுங்கு விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர். ஆனால், படம் மோசமான தோல்வியைத் தழுவ, லைகரை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு போர்க்கொடி தூக்கினர். இல்லையென்றால் லைகர் படத்தின் தயாரிப்பாளரான நடிகை சார்மி மீது தெலுங்கு வர்த்தக சபையில் புகாரளிக்க வினியோகஸ்தர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு சமரசம் ஏற்பட்டு வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்க சார்மியும், இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும் சம்மதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏரியா வாரியாக நஷ்டஈடு தொகையை வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.