சென்னை: தமிழகத்தில் 2.45 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாடு முழுவதும் வா்க்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகத்திலும் இப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக 6பி என்ற படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிவத்துடன் வீடு வீடாகச் செல்லும் அலுவலர்கள், ஆதார் விவரங்களைப் பெற்று ‘கருடா’ என்ற செயலி மூலம், ஆதார் எண்ணை இணைக்கின்றனர்.
அதேபோல், என்விஎஸ்பி இணையதளம் மற்றும் செயலி மூலமும் பொதுமக்கள் தாங்களே இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழகத்தில் தற்போது வரை 40 சதவீதம் வாக்காளர்கள், தங்கள் ஆதார் விவரங்களை இணைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அரியலூர் மாவட்டம் முதலிடம்
தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் தற்போது வரை 2.45 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 61.5 சதவீதம்பேர் இணைத்துள்ளனர். பல மாவட்டங்களில் ஆதார் இணைப்பு 60 சதவீதத்தைக் கடந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் 100 சதவீதம் பணியை முடித்துள்ளனர்.
பொதுமக்களைப் பொறுத்தவரை, ஆதார் எண்ணை எதற்காக இணைக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகளை அலுவலர்களிடம் கேட்கின்றனர். அதற்கு அவர்கள், இரட்டைப் பதிவுகளை நீக்குதல், இடம் மாறும்போது எளிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கி, சேர்ப்பது மற்றும் எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் பல்வேறு வசதிகளை வழங்குவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆதார் இணைப்புக்கான பதிவு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த கட்ட பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.