கோவை,
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதை தொடர்ந்து இன்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில், மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்திருந்த போது, காஜா என்ற வீரர் பந்தை பில்டிங் செய்யும் போது எறிந்தார்.
அது, வெங்கடேஷ் ஐயரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார். இதனையடுத்து மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.
இதனால், அங்கு இருந்த ரசிகர்கள் பதறி போயினர். எனினும் வெங்கடேஷ் ஐயர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக வெங்கடேஷ் ஐயர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார். இருப்பினும் அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு மண்டல அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. மத்திய மண்டல அணியை விட மேற்கு மண்டல அணி 259 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.