வேதாந்தா – ஃபாக்ஸ்கான் விவகாரம் | 'குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை' – தேவேந்திர பட்னாவிஸ் கருத்து

மும்பை: ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் மகாராஷ்ட்ராவில் அமைய இருந்த தொழிற்சாலை, குஜராத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை; நாம் அனைவரும் ஒன்றே என்று மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வேதாந்தா நிறுவனமும் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்கப் போவதாக அறித்திருந்தன. ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலையை அமைக்க இருப்பதாகவும் அவை அறிவித்தன. இந்த தொழிற்சாலையின் மூலம் நேரடியாக 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் தொடங்குமாறு மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள், வேதாந்தா – ஃபாக்ஸ்கான் நிறுவனங்களை அணுகின. பல்வேறு சலுகைகளை அளிப்பது குறித்து ஒவ்வொரு மாநில அரசும் வேதாந்தா – ஃபாக்ஸ்கான் நிறுவனங்களுக்கு உறுதி அளித்தன.

மகாராஷ்டிராவின் புனே அருகில் இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், இந்த தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குஜராத் அரசு, வேதாந்தா – ஃபாக்ஸ்கான் நிறுவனங்களுடன் கடந்த 13ம் தேதி மேற்கொண்டது.

மிகப் பெரிய வாய்ப்பை மகாராஷ்ட்ர அரசு இழந்துவிட்டதாக அம்மாநில எதிர்க்கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை குற்றம்சாட்டின. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் மகாராஷ்டிரா நலனைக் காட்டிலும், மத்திய அரசுக்காகவும், குஜராத்தின் வளர்ச்சிக்காவுமே செயல்பட்டு வருவதாக அவை விமர்சித்தன.

இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை. அதுவும் நமது சகோதர மாநிலம்தான். இவை எல்லாம் ஒரு ஆரோக்கியமான போட்டியே. இதில் நாம் குஜராத், கர்நாடகா என எல்லோரையும் தாண்டி முன்னேறிச் செல்ல வேண்டும். நான் துணை முதல்வராக பதவி ஏற்ற பின்பு வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வாலை சந்தித்து, குஜராத் அரசின் சலுகைகளுக்கு இணையான சலுகைகளை அளிப்பதாக தெரிவித்தேன். எனினும், திட்டம் குஜராத்திற்கு மாற்றப்படுவதற்கான இறுதி கட்டத்தில் இருந்தாக அனில் அகர்வால் தெரிவித்தார்” என்று பட்னாவிஸ் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.