ஹைதராபாத் விடுதலை தினத்தை புறக்கணித்த ஆட்சியாளர்கள்: அமித்ஷா சாடல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹைதராபாத்: தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இங்கு ஆட்சி செய்தவர்கள், ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட தயாராக இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின், பல சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவானது. நிஜாம் ஆட்சியாளர்கள் வசம் இருந்த ஹைதராபாத், 1948 செப்., 17ல் இந்தியாவுடன் இணைந்தது. இதை ஹைதராபாத் விடுதலை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர். இந்தாண்டு பா.ஜ.,வும் இந்த விஷயத்தை கையில் எடுத்து, ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ என்ற பெயரில் மாநிலம் முழுதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஹைதராபாத் வந்தார். செகந்திராபாதில் உள்ள ராணுவ மைதானத்தில் நடக்கும் விழாவில் அவர் பேசியதாவது: நாடு 1947 ல் சுதந்திரம் பெற்றாலும், ஹைதராபாத்தை நிஜாம்கள் ஆட்சி செய்தனர். 13 மாதங்கள் நிஜாம்களின் அடியாட்களுக்கு மக்கள் பயப்பட்டு வந்தனர். ஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என மக்கள் விரும்பினர். அந்த தினத்தை கொண்டாடுவதாக பல அரசியல் கட்சிகள் உறுதி அளித்தன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாடுவதில்லை. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக, இந்த பகுதியை ஆட்சி செய்தவர்கள், கொண்டாட தயாராகவில்லை.

latest tamil news

தெலுங்கானா, ஹைதராபாத் – கர்நாடகா, மரத்வாடா மக்கள், இந்த பகுதியில் இருந்த கொடுமைக்காரர்களின் அட்டூழியத்திற்கு எதிராகவும், இந்தியாவுடன் சேர்வதற்கும் தைரியமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியை ஆள்பவர்கள் பயம் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடாமல் வேறு பெயரில் கொண்டாடுவார்கள். உங்கள் மனதில் இருந்து பயத்தை அகற்றுங்கள் என உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால், மக்களை கொடுமை படுத்தியவர்கள் இனிமேல், நாட்டிற்காக முடிவெடுக்க முடியாது.

தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.