எட்டு ஆண்டுகளாக கணவனாக நினைத்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு தன்னுடைய கணவன் இயற்கையிலேயே ஒரு பெண் என்பதும், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை அறிந்து கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் வதோதரா பகுதியைச் சேர்ந்த அந்த 40 வயது பெண், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கோத்ரி காவல்நிலையத்தில் அதிரடியாக புகார் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். புகாருக்கு ஆளான அந்த நபர் டாக்டர் விராஜ் வர்தன் என அறியப்பட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் பெயர் விஜைதா என்பது தெரிய வந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட அந்த 40 வயது பெண் ஏற்கெனவே திருமணமாகி 14 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்திருக்கிறது. 2011ம் ஆண்டு சாலை விபத்தொன்றில் அவரது முதல் கணவர் இறக்கவே 2014ம் ஆண்டு சமயத்தில் மேட்ரிமோனி மூலம் டெல்லியைச் சேர்ந்த இந்த விராஜ் என்கிற விஜைதாவை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்திருக்கிறார். அதன்பிறகு இருவரும் காஷ்மிருக்கு தேனிலவும் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் இருவருக்குள்ளும் தம்பதியருக்கான எந்த ஒரு உறவும் வைத்திருக்கவில்லையாம். தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் எதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்து வந்த நிலையில், ரஷ்யா சென்றிருந்த போது தனக்கு நிகழ்ந்த விபத்தினால் உடலுறவில் ஈடுபட முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் சிறிய அறுவை சிகிச்சை செய்த பிறகு சரியாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார்.
இப்படியாக காலம் கழிய, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியின் போது கொல்கத்தாவிற்கு சென்று உடல் பருமனை குறைக்கும் bariatrics சர்ஜரி செய்வதாகச் சொல்லி அங்கு செயற்கையாக ஆணுறுப்பை பொறுத்தும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சென்றிருக்கிறார். இதனையடுத்து இயற்கைக்கு மாறாக உடலுறுவு கொண்டிருப்பதாக அந்த பெண் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இதுபோக, இந்த விஷயத்தை வெளியே கூறினால் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் என்றும் அந்த விராஜ் என்கிற விஜைதா மிரட்டியிருக்கிறார். இதனிடையே 40 வயது பெண் பெயரில் 90 லட்சத்திற்கு வங்கியில் கடன் வாங்கி அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் சொந்தமாக ஒரு ஃப்ளாட்டும் வாங்கியிருப்பதாக புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகாரை விசாரித்த போலீசார், அந்த விராஜ் என்ற விஜைதாவை டெல்லியில் இருந்து கைது செய்து வதோதராவுக்கு அழைத்து வந்து மேலும் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கோத்ரி காவல் ஆய்வாளர் எம்.கே.குர்ஜார் கூறியிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM