இந்தியா, சீனா எல்லைப் பிரச்னையென்பது பல ஆண்டுகளாகவே கடும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தியா-சீனா எல்லையில், தனி கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியிருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவர இந்த விவகாரம் பெரியளவில் பேசுபொருளானது. இங்குள்ள அரசியல் கட்சிகளும் இந்தியா – சீனா எல்லை விவகாரத்தில் பாஜகவைச் சாடின. மேலும், காங்கிரஸ் உட்படப் பல கட்சிகள், இந்திய எல்லையை மோடி சீனாவுக்குத் தாரைவார்த்துவிட்டதாக விமர்சித்தன.
இதுபோன்ற சூழலில், உஸ்பெகிஸ்தான் நாட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பிற நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் முக்கியமானதென்னவென்றால், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று தான் முதல் முறையாக உலக அரங்கைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால், இப்படியான ஒரு தருணத்தில் மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது, மோடியும், ஜி ஜின்பிங் அருகருகே நின்றிருந்தும், இருவருமே ஒருவருக்கொருவர் யாரும் கைகுலுக்கவுமில்லை, புன்னகையைப் பரிமாறிக்கொள்ளவுமில்லை என்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும் அடுத்தாண்டு நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்பதற்கு சீனா வாழ்த்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உச்சி மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு நிலைமை, வர்த்தகம் மற்றும் தங்களுக்கிடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.