சென்னை: வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் குவிந்த வரவேற்பு காரணமாக ஏகப்பட்ட தியேட்டர்களில் வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.
வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு வெர்ஷன் இன்று வெளியாகி உள்ள நிலையில், மேலும், படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடித்த வெந்து தணிந்தது காடு படம் இரண்டாம் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இங்கே காண்போம்..
சிம்பு நடிப்பை பார்ப்பதற்கே
இந்த படத்தில் திருநெல்வேலியில் ஒரு குக்கிராமத்தில் முள்வெட்டி பிழைப்பு நடத்தி வரும் முத்து அங்கிருந்து மும்பைக்கு சென்று சூழ்நிலை காரணமாக முத்து பாய் எனும் டானாக மாறுகிறான் என்பதோடு முதல் பாகம் முடிந்துள்ளது. நடிகர் சிம்புவின் நடிப்பை பார்ப்பதற்கே ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து செல்கின்றனர்.
முதல் நாளே டபுள் டிஜிட்
இதுவரை எந்தவொரு சிம்பு படமும் செய்யாத சாதனையை வெந்து தணிந்தது காடு வசூலில் படைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்களே தகவல் தெரிவித்துள்ளன. முதல் நாளில் மட்டும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் டபுள் டிஜிட் கோடிகளில் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வசூல் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.
திருச்சிற்றம்பலம் வசூலை முந்திடுச்சு
நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் முதல் நாளில் 7.40 கோடி வசூல் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 9 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் ஈட்டியது. இந்நிலையில், அந்த இரு படங்களின் வசூலையும் முதல் நாளில் முறியடித்துள்ளது வெந்து தணிந்தது காடு.
இரண்டாம் நாள் வசூல்
முதல் நாள் வசூல் தமிழ்நாட்டிலேயே 10 கோடியை கடந்த நிலையில், இந்தியா முழுவதும் 12 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டாம் நாளான நேற்று காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 8 முதல் 9 கோடி வரை நாடு முழுவதும் இந்த படத்திற்கு வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் நாடு முழுவதும் வெந்து தணிந்தது காடு படம் 21 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் ரிலீஸ்
சில தொழில்நுட்ப காரணங்களுக்காக தெலுங்கில் வெந்து தணிந்தது காடு படத்தை செப்டம்பர் 15ம் தேதியே வெளியிட முடியவில்லை. செப்டம்பர் 17ம் தேதியான இன்று தான் டோலிவுட்டில் இந்த படம் வெளியாகிறது. அங்கேயும் படம் கல்லா கட்டினால் மிகப்பெரிய வசூல் வேட்டையை வெந்து தணிந்தது காடு இன்னும் இரு வாரத்திற்கு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.