”அங்க நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கை இது”.. வெந்து தணிந்த காட்டில் வீசிய மல்லிப்பூ வாசம்!!
தலைவனின் பிரிவை தாங்க முடியாமல் தலைவி வாடுவதை உணர்த்தும் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் எண்ணிலடங்காமல் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக சங்க இலக்கியங்களில். பொருள் தேடி நீண்ட தூரம் சென்ற தன்னுடைய துணைவன், காதலன், அன்புக்குரியவன் நீண்ட நாட்கள் ஆகியும் வராத நிலையில், அவனது பிரிவை எண்ணி உடல் மெலிந்து, உள்ளம் நொந்து தலைவி ஏக்கத்தில் வாடுவதை நம் கவிகள் எத்தனையோ பாடல்களில் வடித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வெளியாகியுள்ள மல்லிப்பூ பாடல் இணைந்துள்ளது என்றே சொல்லலாம்.
கவிஞர் தாமரையால் இதைவிடவும் இன்னும் அழுத்தமாக எழுதியிருக்க முடியும் என்பது வேறு. இருப்பினும், இந்தப் பாடலும் ஏதோ ஒருவிதத்திலும் பலரது இதயங்களை தொட்டிருக்கிறது. ஒருவேளை வெளிநாடுகளில் அல்லது நம் நாட்டிலே கூட ஏதோ ஒரு பகுதியில் பணி நிமித்தமாக சென்று நீண்ட நாட்களாக தம்மை காண வராமல் இருந்து கணவரின் பிரிவை எண்ணி வாடும் ஒரு மனைவியின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. கவிதை நயத்தோடு இந்தப் பாடலை உற்று கவனித்து அவர் பொருட்சுவையோடு நாம் பருகும் போது நம்மை மெய் மறந்து வருத்தப்பட வைத்துவிடுகிறது.
மயங்க வைத்த இசை!
முதலில் இந்தப் பாடலை கவனிக்க வைத்தது பாடலின் இசைதான். பின்புதான் பாடலின் வரிகள். அதாவது பாடலின் இசைக் கோர்வை மற்றும் மதுஸ்ரீ அவர்களின் இனிமையான மயக்கும் குரலும்தான் எல்லோருடைய காதுகளை பாடலின் பக்கம் திருப்பியது. முதலில் ஏதோ பாடல் நன்றாக இருக்கிறது என்று கேட்க வைத்து பின்னர் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. மதுஸ்ரீயின் குரலில் அவ்வளவு வசீகரம் இருக்கிறது. (மயில் இறகே.. மயில் இறகே (அன்பே ஆருயிரே), கண்ணன் வரும் வேலை அந்தி மாலை (தீபாவளி), டிங் டாங் கோயில் மணி (ஜி), என் நண்பனே என்னை ஏய்த்தாய் (மங்காத்தா) இந்தப் பாடல்களை சற்றே நினைவு படுத்திக் கொள்ளவும்)
இந்தப் பாடல் ஒரு விதமான சோக கீதம் தான். ஏக்கத்தை வெளிப்படுத்துவதுதான். ஆனால், பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் உள்ள இசைக் கோர்வை பீட் ரகம். ஒரு குத்தாட்ட, குதூகல மனநிலையை உருவாக்கும் தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. மதுஸ்ரீ குரல் தொடங்கும் முன் வரும் ”ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்” என்ற கோரஸ் பீட் மோடில் தொடங்கும். ஆனால், ‘ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே’ என மதுஸ்ரீ பாடத் தொடங்கிய உடனே ஒரு வித சோகத்தில் நம் மனம் கரைந்து விடுகிறது. அதுவும் ‘மச்சான் எப்போ வர போற’ என்று அவர் திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த ஏக்கம் நம்மையை தொற்றிக் கொள்கிறது.
படத்தில் பாடலின் பின்புலம்!
வெந்து தணிந்தது காடு திரைப் படம் திருநெல்வேலியில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து மும்பைக்கு வேலைக்காக சென்ற உழைக்கின்ற மக்களின் பின்புலத்தை அடிப்படையாக கொண்ட கதைக்களம். இந்த பாடல் இடம்பெற்றுள்ள சூழலை தெரிந்தவர்களுக்கு கூடுதல் இனிமையை கொடுக்கும். தன்னுடைய மனைவி, பெண் குழந்தையை பிரிந்து மும்பைக்கு வேலைக்கு சென்ற ஒரு கதாபாத்திரம் தன்னுடைய மனைவிக்கு போன் செய்யும் போதுதான் இந்தப் பாடல் வருகிறது. அதுவும் மதுபோதையில் இருக்கும் போது அவன் தன் மனைவிக்கு போன் செய்கிறான். எப்பொழுதுமே மதுபோதையில் இருக்கும்போது ஒருவன் தன்னிலை மறந்த நிலையில் இருப்பான். பாசமோ, கோபமோ அப்பொழுது உச்சத்தில் வெளிப்படும். அப்படித்தான். மனைவியிடம் போனில் பேசுகிறான். ஏன் மல்லிப்பூ வைக்காமல் இருக்கிறாய் என்று அவர் கேட்கிறார். அதற்கு அவளோ இந்த நேரத்தில் எதுக்கு மல்லிப்பூ வைக்கணும், நீயே இங்கு இல்லையே என்கிறாள். அப்பொழுதுதான் தன் மனைவியை பாடச் சொல்கிறான். அவளும் மல்லிப்பூ என்றே பாடத் தொடங்குகிறாள். படத்தில் வரும் சூழ்நிலையோடு பார்த்தால் பாடலின் அர்த்தமும் இன்னும் கூடுதலாக புரியும்.
பாடல் வரிகளின் அர்த்தம்!
தாமரை எழுதியுள்ள இந்தப் பாடலின் வரிகள் மிகவும் எளிமையாக இருந்தாலும், சற்றே இலக்கிய நயத்துடன் எழுதியிருக்கிறார்.
மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது.. அதாவது தன்னுடன் கூடுவதற்கு துணைவன் இல்லையே.. மல்லிப்பூ கசங்கி போவதற்கு வழியில்லையே என்ற ஏக்கத்தோடு பாடுவது போல் பல்லவி தொடங்குகிறது. ‘சொப்பனத்தில் மட்டும்தான் உன்ன நான் சந்தித்தேன்’ என்று பல்லவியில் வரும். பிரிந்து வாழ்பவர்களுக்கு தன்னுடைய துணைவர்களை கனவில் தான் அடிக்கடி சந்திக்க முடியும். நேரில்தான் வழியில்லையே..!
முதல் சரணம்!
முதல் சரணம் சற்றே புரிதவதற்கு கடினமாக இருக்கும். இரண்டாவது சரணத்தில் வரும் பாடல் வரிகள் நேரடியாக விளங்கும். ஆனால், இது சற்றே கவிதை நயத்தில் இருக்கும். ஒன்றை ஒரு வரியில் சொல்லி கூடுதல் அர்த்தத்தை நம்மை உணர வைக்கும்.
“வாசல பார்க்கிறேன் கோலத்தை காணோம்
வாளியை சிந்துறேன் தண்ணியை காணோம்
சோலி தேடி போறேன் காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்” .. இந்த வரிகளில் சொல்ல வருவது, தன்னுடைய கணவன் நினைப்பால் அவள் முழுவதும் ஆட்பட்டு எந்த வேலையிலும் முழு கவனம் இல்லாமல் இருக்கிறாள். என்ன செய்கிறோம் என்பதுகூட சுய நினைவில்லாமல் இருப்பதை காட்டுகிறது. கோட்டிக்காரி என்றால் பித்துப்பிடித்தவள். ஒரு பித்துப்பிடித்தவளை (பைத்தியத்தை) போன்ற நிலையில் அவள் நெஞ்சு அவ்வளவு பாரத்தோடு இருக்கிறது.
“காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்”.. ஈரமாகும் கண்ணோரம் என்பது கண்ணீர் துளிகள் விழிகளில் குடியிருக்கும் என்ற தொனியில் இருக்கிறது.
இரண்டாவது சரணம்:
இரண்டாவது சரணத்தில்தான் ரொம்பமும் தன்னுடைய தவிப்பை அவள் வெளிப்படுத்துவது போல் வரிகள் இருக்கும்.
“தூரமா போனதே
துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே
போதுமுன்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒர் ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்”
நீ தூரமா போனது எனக்கு துக்கம். பக்கமா வாழ்ந்தாதான் எனக்கு சந்தோஷம். அப்படியின்று அவள் சொல்லிவிட்டு, தன்னுடைய இரவு நேர தவிப்பை சொல்கிறாள். அதாவது ஊர் அடங்கிப் போன நேரம் என்னுடைய மனதில் ஒரு ஆசை வரும். அதாவது கணவனை கூட நினைக்கும் ஆசை. அந்த ஆசை எவ்ளோ நேரம் இருக்குமாம். கோழிகூவுற வரைக்கும். தூங்காம வேகும் என்பது உடல் சூட்டை குறிப்பது. சூடு என்பது ஏக்கத்தின் சூடு.
“அங்க நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல் வந்துசேரும்”
இந்தப் பாடலிலேயே மிகவும் அழுத்தமான வார்த்தை இதுதான். ‘நீ அங்கயும் நான் இங்கயும் வாழ்ந்தது போதும். நீ வந்துசேரு’ என்று கோபத்தோடு கெஞ்சுகிறாள். அதுவும் எப்படினா.. சொல்லிட்டு இல்லை.. சொல்லாம நேரில் வந்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடு என்று கேட்கிறாள்.
இறுதியில் சொட்டிய கவிநயம்!!
எப்பொழுதும் இரண்டாவது சரணம் முடிந்த பிறகு மீண்டும் பல்லவிதான் வரும். புதிய வரிகள் வராது. ஆனால், இறுதியில் தாமரை அவ்வளவு அற்புதமான வரிகளை கொடுத்திருக்கிறார். அவ்வளவு கவித்துவம்.
“உத்தரத்த பாத்தே நானும் விக்கிவிடப்போறேன்..
அட எத்தன நாள் ஏக்கம் இது
பெரும் மூச்சில தனிக்கொடி ஆடுதே
துணி காயுதே”
இது எவ்வளவு நாள் ஏக்கம் என்று சொல்லிவிட்டு.. அவள் மூச்சு பட்டு துணிக்கொடி ஆடுதே என்கிறவர் அந்த மூச்சுக்காற்றின் வெப்பத்தில் துணி காய்ந்துவிடுகிறது. அதாவது ஈரம் காய்ந்துவிடுகிறது என்கிறார். அந்த அளவிற்கு அவர் உடல் சூடாகவும், ஏக்கப் பெருமூச்சு விடுகிறாள்.
“கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம்கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற”
கள்ளக் காதல் போல நாம் மெல்ல பேச நேரும் என்பது கணவனிடம் மனைவி பேசும் போதோ, மனைவியிடம் கணவன் பேசும் போதோ சற்றே அந்தரங்கம் இருக்கும். அப்பொழுது பக்கத்தில் யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற ஒருவித தயக்கத்தில் பேசுவார்கள். அதைத்தான் கள்ளக்காதல் போல் பேசுவதாக சொல்கிறார். அப்படி யாரேணும் வருகிற சத்தம் கேட்டால், கொஞ்சம் நேரம் தூக்குற மாதிரி நடிக்கணும் என்பதைத்தான் பொய்யாக தூங்க வேணும் என்கிறாள்.
இறுதியில் .. ‘சொல்லிக்காம வந்து என்ன சொக்கவிடப்போற..’ என்ற நம்பிக்கையோடு பாடல் வரிகள் முடிகிறது.
நிச்சயம் இந்தப் பாடல் வெளிநாடுகளில் மனைவிகளை பிரிந்து வாழ்பவர்கள், அந்த கணவன்களை பிரிந்து மனைவிகளின் இதயத்திற்கு நெருக்கமாக தொடும்.