அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் – மு.க.ஸ்டாலினுக்கு பாஜக நெருக்கடி?

அரசின் ஊழல்களை கண்டித்து, தமிழக பாஜக சார்பில், விரைவில் போராட்டம் நடத்த அக்கட்சித் தலைவர் கே.அண்ணாமலை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், அண்மையில், எதிர்க்கட்சியான பாஜக மாபெரும் போராட்டம் நடத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஊழல்களை மையமாக வைத்தே இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், பாஜகவினர் பலர் காயம் அடைந்த நிலையில், போலீசாரும் காயம் அடைந்தனர்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்திய இந்தப் போராட்டத்திற்கு பின்னால், ஒரு சுவாரசிய தகவல் இருக்கிறது. அதாவது, மேற்கு வங்க மாநிலத்தில், பாஜகவில் இருந்து மூத்தத் தலைவர்கள் வெளியேறி வருவதால், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பாஜக மேலிட உத்தரவுப்படி இந்தப் போராட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ‘மேற்கு வங்க மாநிலத்தைப் போலவே, மற்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும், பாஜகவினர் ஆளும் கட்சி ஊழல்களை அம்பலப்படுத்தி அடிக்கடி போராட்டம் நடத்த வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர், மாநில பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழக பாஜக தலைவர்களிடம் ‘உட்கட்சி சண்டையை நிறுத்தி, மேற்கு வங்க பாஜகவினர் போராட்டம் நடத்தியதைப் போல, திமுகவின் ஊழல்களுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள். இது 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பயனளிக்கும்’ என கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாம்.

இந்த விவகாரம் குறித்து அலர்ட்டான தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, திமுக அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தும் நோக்கில், மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போராட்டத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான தொண்டர்களை கலந்து கொள்ள செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை, மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், தமிழக பாஜக வழங்கி உள்ள நிலையில், இந்தப் போராட்டத்திற்கு பிறகு, மேலும் பல அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, ஆளுநருக்கு அனுப்பி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்க மாநில பாஜக நடத்தியதை விட, மிகப் பெரிய அளவில் போராட்டம் இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தமிழக பாஜகவினர்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.