சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எந்த கோரிக்கைக்கு சென்றாரோ அந்த கோரிக்கையை மறந்துவிட்டு கட்சியினுடைய மூத்த தலைவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை மிகவும் தரமற்று பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு வரும்போது எடப்பாடி அரை டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருந்திருப்பார். எடப்பாடி பழனிசாமி தலைமை பண்பு இல்லாதவர்.
ஜெயலலிதாவால் நல்ல தலைவர் என பெயர் எடுத்தவரை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருகிறார். பழனிசாமி முதலமைச்சரான பிறகு அதிமுக நான்காக பிரிந்துள்ளது. அதிமுக மக்கள் பிரச்னையை எடுத்து வைக்காமல் உட்கட்சி சண்டையிட்டுக் கொண்டுள்ளதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.
கோடநாடு வழக்கு தீர்ப்பில் குற்றவாளி யார் என்று தெரியும்பொழுது இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். ஓபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இருக்கும் பழனிசாமி செய்த தவறுகள் பட்டியலிட்டு சொல்லப்படும். அதிமுக கட்சியை அழிப்பதற்குகேன்றே ஒரு சூனியமாக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை தொடர்ந்து ரெய்டு செல்வது தவறில்லை, தவறு செய்யாமல் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் , அதை விட்டுவிட்டு எஸ்பி வேலுமணி இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் அமர்வது கண்டனத்திற்குரியது” என்றார்.