திருமலை: தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 23 இடங்களில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) செயல்பாடுகள் குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. ஏற்கனவே தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக இந்த அமைப்பை சேர்ந்த ஷாதுல்லா, முகமதுஇம்ரான், முகமதுஅப்துல்மொபின் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் மட்டும் 20 இடங்களில் ஒரே நேரத்தில் 4 என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றன. நிர்மல் மாவட்டம் பைன்சாவிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மதீனா காலனியில் உள்ள பல வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. நிஜாமாபாத்தில் நடத்திய சோதனையில் கிடைத்த தகவலை வைத்து பைன்சாவுக்கு வந்ததாக தெரிகிறது. ஜகித்யாவில் உள்ள 3 வீடுகள், டவர் சர்க்கிளில் உள்ள கேர் மெடிக்கல் மற்றும் டி.ஆர். நகரில் உள்ள ஒரு வீட்டில், என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தி டைரிகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
இதேபோல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிபாலம் காஜாநகரிலும் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. இலியாஸ் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளுடனான தொடர்புக்கு ஆதாரங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதேபோல் கர்னூல் மற்றும் குண்டூர் மாவட்டத்திலும் பல இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலங்களிலும் 23 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.