இந்தியாவில் அரசாங்கத்தால் செய்யப்படும் சுகாதார செலவுகள் தொடர்ந்து கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. சமீபத்திய தேசிய சுகாதாரக் கணக்கு அறிக்கையின்படி, ஆறு வருட காலப்பகுதியில் அரசாங்க செலவினங்களில் அதிகரிப்பு மற்றும் வீட்டுச் செலவுகள் குறைந்துள்ள போதிலும், நிலையான விலையில் இந்தியாவின் தனிநபர் சுகாதாரச் செலவு கிட்டத்தட்ட தேக்கநிலையில் உள்ளது.
அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் அரசாங்க செலவினம் 1.35 சதவீதத்தில் இருந்து 1.28 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த சுகாதாரச் செலவு – அரசு மற்றும் அரசு அல்லாத முகவர்களின் செலவு – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாட்டின் தனிநபர் மொத்த சுகாதாரச் செலவு 2013-14ல் 3,174 ரூபாயில் இருந்து 2016-17ல் 3,503 ரூபாயாக உயர்ந்து – 2018-19ல் 3,314 ரூபாயாக குறைந்துள்ளது.
2017 தேசிய சுகாதாரக் கொள்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை சுகாதாரப் பராமரிப்புக்காக செலவிட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், 2013-14ல் 64.2 சதவீதமாக இருந்த சுகாதாரச் செலவுகளின் பங்கு 2018-19ல் 48.2 ஆகக் குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 55 மில்லியன் மக்கள் சுகாதார செலவினங்களைச் சந்திக்க வறுமையில் தள்ளப்பட்ட நமது நாட்டில் இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. பொதுப் பொருளாதார நெருக்கடி போன்ற விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும், சுகாதார உதவியை நாட வேண்டியவர்கள் அதனை நாடாமல் இருக்க முடியுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
OoP expenditure எனப்படும் பணத்தை திரும்பப் பெற முடியாத செலவுகளை கணக்கிடுவதற்குப் பின்பற்றப்படும் வழிமுறைகள் பகிரப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். அத்துடன், சுகாதாரச் செலவுத் தரவுகள் குறிப்பிடத்தக்க பின்னடைவுக்குப் பிறகு வருகிறது என்பதையும், கொரோனா போன்ற தொற்று நோய்கள் OoP செலவினங்களை அதிகரிக்க வழிவகுத்திருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோய்ச் சுமை அதிகமாக இருக்கும்போது சுகாதாரக் கட்டமைப்பு சீரற்றதாகவே தொடர்கிறது என்ற உண்மையை மத்திய, மாநில அரசுகள் மறந்துவிடக் கூடாது என்று இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவில் மொத்த இறப்புகளில் 61 சதவீதம் வாழ்க்கைமுறை அல்லது பரவாத நோய்களால் ஏற்படுகின்றன. சுகாதார அமைப்புகளுக்கு பயனுள்ள முக்கியத்துவம் கொடுத்து சுகாதார அமைப்புகள் அமைக்கப்பட வேண்டிய இடத்தில், இந்தத் துறையை தனியார்மயமாக்குவதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மோசமான அணுகல், தகவல் சமச்சீரற்ற தன்மை மற்றும் தவறான மேலாண்மை ஆகியவற்றால் அரசாங்க சுகாதார திட்டங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலகளாவிய, அணுகக்கூடிய சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இந்தியா தனது இலக்கை அடைய வேண்டுமானால் மருத்துவ, சுகாதார கட்டமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், இதுதொடர்பாக உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.