இம்பால்: மணிப்பூரில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டை மக்கள் கண்டறிந்ததால், அவற்றை அதிகாரிகள் குழு அழித்தது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜப்பானியப் படைகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா மீது படையெடுத்தன. அவர்கள் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து பகுதியை தங்களது போர் தளங்களாக பயன்படுத்தினர். வெடிகுண்டுகளை ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் கிழக்கு மணிப்பூரில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட இடத்தை தோண்டும்போது அங்கு பழங்கால வெடிகுண்டு மட்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்புப் படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்தனர்.
இதுகுறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் கூறுகையில், ‘மியான்மர் எல்லையில் உள்ள கம்ஜோங் மாவட்டத்தில் குழி தோண்டும் போது உள்ளூர் மக்களால் வெடிகுண்டை கண்டுள்ளனர். அதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அதன்பின் ராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள் தங்களது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 250 பவுண்ட் எடையுள்ள வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். பின்னர், அந்த வெடிகுண்டை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று அழித்தோம்’ என்றார்.