நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7000 ஐ விட அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் இலங்கையில் 5600 காட்டு யானைகளே இருப்பதாக அறியப்பட்டது. ஆனால் இறுதியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின் பிரகாரம் யானைகளின் எண்ணிக்கை 7000 ஐ விட அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னேரிய, கிரிதலை மற்றும் பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்த பகுதிகளில் சுமார் 350 காட்டு யானைகள் காணாமல் போயுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரினால் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் வினவியமை தொடர்பாக, வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதுபற்றி விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் இலங்கையில் தந்தமுள்ள யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. தற்போதைய அறிக்கைகளின் படி நாட்டின் வனப்பிரதேசத்தில் 142 தந்தமுள்ள யானைகள் காணப்படுவதாகத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில்(2022) கிரிதலை, மின்னேரிய மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டம் அதிகரித்திருந்ததால் காட்டு யானைகளுக்கு உணவு கிடைக்காததால், அவைகளில் பெரும்பாலானவை வேறு பிரதேசங்களுக்கு உணவு தேடி இடம்பெயர்ந்திருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.
காட்டுயானைகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் இடம்பெயர்வதால் குறித்த பிரதேச மக்களுக்கு இந்த யானைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.