புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் அங்கு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினர். இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் வேறு நாடுகளில் சேர்ந்து படிக்கலாம். இது தொடர்பாக உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இதர நாடுகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறும்போது, “உக்ரைனிலிருந்து மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பிய மாணவர்கள் பிற நாடுகளில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர்வதற்கான தகவல்கள் அடங்கிய இணையதளத்தை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்படும். இது தொடர்பாக வரும் 23-ல் மத்திய அரசு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்” என்றனர்.