கோவை ராமலிங்க காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்,
“தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்க்கான காரணத்தைத் தடுக்காமல், தற்காலிக நடவடிக்கையைக் அரசு செய்து வருகிறது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை.
உடனடியாக பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். கோவை வாலாங்குளத்தில் டீசல் படகு சவாரி விடுவதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஸ்மார்ட் சிட்டிப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. என் தொகுதில் கமல் நேற்று மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டுள்ளார்.
`கழிப்பறை கட்டி தருகிறேன், சுத்தம் செய்கிறேன்!’ என்று சொல்லியிருக்கிறார். நான் எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறது என பட்டியல் தருகிறேன். அவர் உதயநிதியுடன் மிக நெருக்கமாக பழகிக்கொண்டிருக்கிறார்.
எனவே அவரிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். உதயநிதியோடு திரைப்படம் சம்பந்தமாக கமல் பேசும்போது, கோவை தெற்கு தொகுதி பிரச்னையை பற்றியும் பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும். சூட்டிங்கிற்கு இடையில் இது போன்று, டைம் பாஸ்க்காக வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அமைச்சர்களைக் தாண்டி, பவராக இருப்பவர் உதயநிதிதான். நான் சட்டமன்றத்தில் நேரில் பார்க்கிறேன். முதல்வருக்கு பலரும் வணக்கம் வைப்பதைவிட அவருக்குத் தான் அனைவரும் முதலில் வணக்கம் வைக்கிறார்கள்” என்றார்.