புவனேஸ்வர்; ஒடிசாவில் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட நிலையில், அதில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஒடிசா மாநிலம் பத்ரக் வழியாக சென்ற ஹவுரா – புவனேஸ்வர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் நேற்று லெவல் கிராசிங்கில் தடம் புரண்டது. திடீரென பிரேக் போட்டதால், இன்ஜினுக்கு அடுத்த நிலையில் இருந்த லக்கேஜ் வேகனின் முன் சக்கரங்கள் தடம் புரண்டது. அனைத்து பயணிகள் பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்ததால், ரயில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடர்ந்து ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் தொழில்நுட்ப குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரட்டை வழித்தடம் என்பதால், மற்ற ரயில்கள் செல்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக தடம் புரண்ட பெட்டிகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டது. ரயில் தடம் புரண்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.