கரூரை அடுத்த ஆத்தூர் பிரிவு சாலையில் அறிஞர் அண்ணா 114வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு அதிமுக கரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய எம்.ஆர். விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மன்னார்குடி கும்பளுடன் சேர்ந்து ரூபாய் ஆயிரம் கோடியை கொள்ளை அடித்துள்ளார்.
பணம் வாங்கிய நபர்களுக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும் அல்லது பணத்தையாவது திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று தற்போது வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கந்தசாமியும்,குப்புசாமியும் பணத்தை வாங்கி திருப்பிக் கொடுத்திருந்தால் நீதிமன்றம் ஒத்துக் கொள்ளும். ஆனால், மக்கள் பிரதிநிதியாக இருக்க கூடியவர்கள் செய்தால் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கம் அளித்தார்.
அதிமுகவில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பேன் என கூறி உயிரும் உதிரமாக இருப்பேன் என கூறிய செந்தில் பாலாஜிக்கு இப்போது உயிரும் உதிரமும் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், டிடிவி தினகரனை முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டேன் என கூறிய செந்தில் பாலாஜி அடுத்த நாளே ரயில் பிடித்து திமுகவில் ஐக்கியமானார். நாள் நெருங்கி விட்டது. திமுக என்றாலே திருடர்கள் முன்னேற்ற கழகம் என்று தான் பெயர். திமுக ஆட்சிக்கு வந்தாலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே நடக்கும். அதிமுக ஆட்சியில் இரண்டு லாக்கப் மரணம் நடைபெற்றது. அதற்காக தமிழகமே பொங்கி எழும் வகையில் யார் யாரோ பேசினார்கள். இப்போது 17 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளது. ஒருவரும் அது குறித்து வாய் திறந்து பேசுவதில்லை என்றார்.
கடந்த ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்துள்ளார் என்றால் அதிமுக ஆட்சி அந்த அளவுக்கு அலட்சியமாக இருந்துள்ளதா என்று விஜயபாஸ்கரின் பேச்சுக்கு பின்னர் விமர்சனங்கள் எழுகிறது. செந்தில்பாலாஜி தற்போது திமுகவில் இருந்தாலும் அவர் ஊழல் செய்தபோது அதிமுகவில் தானே இருந்தார் அபுபடி என்றால் அதற்கு யார் பொறுப்பு என்றும் கேள்வியை எழுப்புகின்றனர்.