உத்தர கன்னடா : ”கடலையும், கடல் சார்ந்த இயற்கை வளங்களையும் பாதுகாப்பது நமது கடமை. இதற்காக ஒவ்வொருவரும் கை கோர்க்க வேண்டும்,” என கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார்.உத்தர கன்னடா கார்வாருக்கு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் சென்றார்.அங்குள்ள இந்திய கடற்படை தளத்தை ஆய்வு செய்தார். கடலோர காவல்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் 75ம் சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, கார்வார் ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில், ‘சுத்தமான கடல் – பாதுகாப்பான கடல்’ என்ற நிகழ்ச்சியை, நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நாடு முழுதும், 75 நாட்களுக்கு, 75 கடற்கரைகள் துாய்மைப்படுத்தும் பணி ஜூலை 3ம் தேதியில் இருந்து, செப்டம்பர் 17ம் தேதி வரை நடத்தப்படுகின்றன. நிறைவு நாளில் கார்வார் கடற்கரை துாய்மைப்படுத்துவது மகிழ்ச்சி.பல பொது மக்களும் தாமாக முன் வந்து, துாய்மை பணியில் ஈடுபடுத்தி கொண்டது வரவேற்கத்தக்கது.
இந்திய கடற்கரைகளுக்கு தனி வரலாற்று சிறப்பு உண்டு. நதிகள், கடல் இணைக்கும் உறவு குறித்து இந்திய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆன்மிக சம்பிரதாயங்கள், இலக்கியம், சிற்பக் கலை, ஓவியக் கலை, புராதன காவியங்கள் கடலை குறிப்பிடுகின்றன. நாட்டில், 7,500 கி.மீ., துாரத்துக்கும் மேலாக கடற்கரை பகுதி கொண்டுள்ளன.ஹிந்து மஹா சமுத்திரம் ஒரு நாட்டின் பெயரை கொண்டிருப்பது சிறப்பு. கடலில் கிடைக்கும் இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும். இதற்காக துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இது நமது கடமை.ஒவ்வொரு குடிமகனும் துாய்மை பணியில் ஈடுபடுத்திகொண்டு இயற்கையை பாதுகாக்க கை கோர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், அரபிக் கடலில் சிறப்பு பூஜை செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement