கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைவது உறுதி! – மக்களின் பார்வை எப்படி இருக்கும்?

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகே அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்ம் குறித்த தகவல்கள் ஏற்கெனவே வெளியானபோது பலர் அதை வரவேற்க, எதிர்க்கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்

பேனா நினைவுச் சின்னம்.., எழுந்த சர்ச்சை ;

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையை போற்றும்விதமாக, அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை விடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், இந்தச் சிலைக்குச்செல்ல கரைமீது 290 மீட்டரும், கடலின்மீது 360 மீட்டரும் என மொத்தம் 650 மீட்டர் தொலைவில், கடல்பரப்பிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இரும்பாலான கண்ணாடிப் பாலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்துக்கு `முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என்று பெயரிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தத் தகவல் வெளியான உடனேயே, “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பணமில்லை, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்குப் பணம் இல்லை. இதற்கு மட்டும் பணம் இருக்கிறதா? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்” என அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தவிர, “கடலுக்குள் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை அமைத்தால் இன்னும் சில பத்தாண்டுகளுக்குப் பின்பாக அக்கட்டுமானம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது” என பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள் எச்சரித்தன. “பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என மீனவ அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின.

கருணாநிதி, ஸ்டாலின்

ஆனால், “பேனா சிலை அமைப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றுதான்” எனவும் “இல்லை. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு வெளியிடவில்லை” எனவும் ஆளும்தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. மேலும், “கலைஞருடைய பேனாவுக்கு ஒரு நினைவுச்சின்னம் வைக்கலாம் என்கிற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்திருக்கிறோம். முதலமைச்சர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் இறுதி” என திமுக-வின் செய்தித் தொடர்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

முதற்கட்ட அனுமதி.. அடுத்து என்ன?

இதுஒருபுறமிருக்க, இத்திட்டத்தை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு பொதுப்பணித்துறை, CRZ (Coastal Regulation Zone) அனுமதிகேட்டு சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் அனுமதிக்காக, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கு முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொதுமக்களிடம் இந்தத் திட்டம் தொடர்பாகக் கருத்துக் கேட்டு, மாசுக் காட்டுபாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை பொதுமக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலரிடம் கேட்டறிந்தோம்..,

ப்ரியன்

ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர் :

“தமிழ்நாட்டு அரசியலின் மையமாக கிட்டத்தட்ட 70 ஆண்டுகாலம் கட்டி ஆண்டவர் கலைஞர். எழுத்து, சினிமா போன்ற விஷயங்களிலும் முத்திரை பதித்தவர். ஒருசில ஊழல் புகார்கள் அவர்மீது முன்வைக்கப்பட்டபோதும், அது நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்புவதில் எந்தத் தவறுமில்லை. படேலுக்கு, சிவாஜிக்கு ஆயிரம் கோடி செலவு செய்து சிலைவைக்கும்போது கலைஞருக்கு நூறு கோடி செலவு செய்வதில் தவறில்லை. கலைஞர் எதிர்ப்பு, திமுக எதிர்ப்பில் ஊறிப்போனவர்கள்தான் இதை எதிர்ப்பார்கள். தவிர, வரி செலுத்துபவர்கள் என்கிற பெயரில் நடுத்தர வர்க்கத்தினர் சிலர் எதிர்ப்பார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருக்கத்தான் செய்யும். அதேவேளை, பேனா நினைவுச் சின்னம் அமைத்தால், அது வைக்கப்பட்டதற்கான அடிப்படை உணர்வு, மக்களிடம் சரியாகக் கடத்தப்படுமா என்று தெரியவில்லை. கலைஞரின் சிலை எழுப்பும் உணர்வை பேனா எழுப்புமா என்பது சந்தேகம்தான்.”

லெனின் (சமூக ஆர்வலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

“ஆளுமைமிக்க ஒரு தலைவரின் ஞாபக அர்த்தமாக ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பது காலம்காலமாக நடந்துவருவதுதான். அவருடைய எழுத்தை அடையாளப்படுத்தும் வகையில் பேனாவை நினைவுச் சின்னமாக அமைக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. அது கூடாது என முற்றிலும் புறந்தள்ள முடியாது. அதேவேளை, அதற்கு செலவுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். மிகக்குறைவான செலவில் அடையாளத்தை உருவாக்கினால் சரி, பிரமாண்டமாக செலவு செய்வதை மக்கள் விரும்புவதில்லை. திருவள்ளுவர் போன்ற பொது அடையாளங்களுக்கு வைக்கும்போது விமர்சனங்கள் வராது. ஆனால், அரசியல் ஆளுமைகளுக்கு வைக்கும்போது விமர்சனங்கள் வரும். அதனால், அதைத் தவிர்க்கலாம். அந்தப் பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தலாம். கொரோனாவுக்குப்பிறகு மக்களுக்கு வாங்கும் சக்தி குறைந்திருக்கும்போது மக்கள் மத்தியில் சர்ச்சையாக வாய்ப்பிருக்கிறது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.