காட்பாடி : சொந்த வீட்டை விற்று விவசாயியாக மாறிய வங்கி அதிகாரி.!

சொந்த வீட்டை விற்று தரிசாக கிடந்த நிலத்தை வாங்கி பசுமையாக மாற்றி ‘அறிவுத்தோட்டம்’ எனப் பெயர் சூட்டி இயற்கை விவசாயம் செய்து வருகிறார், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர். அவரைப் பரிகாசம் செய்த உறவினர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி செந்தமிழ்ச் செல்வன். விவசாயிகள் உழவுத் தொழிலை கைவிட்டு வருவதை கண்கூடாகப் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தார். உலகிற்கே உணவளிக்கும் உழவனே விவசாயத்தை கைவிட்டால் வரும் காலம் என்னாகும் என யோசித்த செந்தமிழ்ச் செல்வன், இவ்விசயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
image
அதன்படி வங்கிப் பணியிலிருந்து விடைபெற்றவுடன் தனது வாரிசுகளுக்காக வாங்கியிருந்த வீட்டை விற்று, காளாம்பட்டு என்ற இடத்தில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். தரிசு நிலமாகக் கிடந்த அந்த இடத்தை வாங்கிய செந்தமிழ்ச் செல்வனை அவரது உறவினர்கள் கேலி செய்துள்ளனர். ஆனால், சற்றும் மனந்தளராத அவர், விடா முயற்சியால் அவ்விடத்தை பசுஞ்சோலையாக மாற்றியுள்ளார்.
மூலிகைச் செடிகள், காய்கறிச் செடிகள் மற்றும் பல வகை மரங்கள் என யாரும் நம்ப முடியாத அளவுக்கு மாறிவிட்டிருக்கும் அந்த நிலத்திற்கு அவர்
சூட்டியிருக்கும் பெயர், ‘அறிவுத்தோட்டம்’ .
image
வங்கி அதிகாரியாக இருந்த இவர், தற்போது கைதேர்ந்த விவசாயியாக மாறிவிட்டுள்ளார். அயராது உழைத்ததற்கு தற்போது பலனும் கிடைத்து
வருவதாகக் கூறுகிறார். வங்கிப்பணியில் இருந்தபோது உழவர்களிடமிருந்து திரட்டிய தகவல்கள், இயற்கை விவசாயத்தில் பெற்ற அனுபவம் ஆகியவற்றை பிறரும் அறிந்து கொள்ளும் வகையில், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
image
இதுகுறித்து பேசியிருக்கும் செந்தமிழ்செல்வன், எனது லட்சிய வேட்கையின் அடிப்படையில் இயற்கை வேளாண்மையை மேற்கொண்டேன். 10 ஆண்டுகளில் அறிவுத் தோட்டத்திற்குள் ஒரு சிறுதுளி ரசாயன உரம் கூட வரவில்லை. 2 முதல் 3 ஆண்டுகளில் 4 டன் மாம்பழ விளைச்சல் கிடைத்துள்ளது. மேலும் தென்னை மரங்கள் மூலம் ஓராண்டுக்கு 10,000 காய்கள் கிடைக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
image
மேலும் தனது அறிவுத் தோட்டத்தில் மாதமொருமுறை இலவச கலந்தாலோசனையுடன் கருத்தரங்கம் நடத்தி வரும் செந்தமிழ்ச் செல்வன்,
இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த மக்கள் நலச் சந்தை ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.