ராமேஸ்வரம்: அதிமுக தொடர்பான அத்தனை வழக்குகளிலும் கடும் பின்னடைவை சந்தித்துள்ள அக்கட்சியின் ஓபிஎஸ் கோஷ்டியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ராமேஸ்வரம் கோவிலில் சிறப்பு பூஜைகள், யாகத்துடன் தரிசனம் செய்தார்.
அதிமுக இப்போது ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் ஓபிஎஸ் கோஷ்டிக்கு கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது.
அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி நடத்திய ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேபோல் ஜூலை 11-ந் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்ற போது பெரும் வன்முறை வெடித்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் கோஷ்டிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இபிஎஸ் கோஷ்டி நடத்திய ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவி, இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதும் செல்லும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ்-க்கு எந்த சாதகமான தீர்ப்பும் வரவில்லை.
ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியைப் போல தாமும் அதிமுக தலைமை அலுவலகம் செல்வேன் என சென்னை போலீசில் மனு கொடுத்தார் ஓபிஎஸ். ஆனால் நீதிமன்ற அனுமதியுடன் வந்தால்தான் போலீஸ் பாதுகாப்பு தரப்படும் என்ற பதில்தான் அவருக்கு கிடைத்தது. இதனால் அதிமுக ஓபிஎஸ் கைகளில் இருந்து நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று ராமேஸ்வரத்துக்கு குடும்பத்துடன் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தனது குடும்பத்துடன் வந்து கடல் இறங்கி புனித நீராடினார். பின்னர் பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் ஓபிஎஸ் நீராடினார். மேலும் கோவில் அருகே உள்ள மடம் ஒன்றில் நடைபெறும் சிறப்பு யாக பூஜையிலும் ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.
அதிமுகவில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் குடும்பத்துடன் ஓபிஎஸ் சாமி தரிசனம் செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் நாம் விசாரித்த போது, ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவருக்கு திதி கொடுக்கவே ராமேஸ்வரத்துக்கு ஓபிஎஸ் குடும்பத்துடன் வந்து யாக பூஜை நடத்தினார் என்றனர்.