மும்பை: கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடன் சிறையில் இருந்த தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
மோசடி செய்த பணத்தில் இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் பரிசாகக் கொடுத்ததாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடிகை ஜாக்குலினிடம் டெல்லி போலீஸின் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சக நடிகர், நடிகைகள் சுகேஷ் குறித்து எச்சரிக்கை செய்த நிலையிலும், அவரைத் திருமணம் செய்ய அப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விரும்பியதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சுகேஷுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் சிறப்பு கமிஷனர் (பொருளாதார குற்றப்பிரிவு) ரவீந்திர யாதவ் கூறும்போது, “சுகேஷ் தன்னுடைய பணத்தின் மூலம் பாலிவுட் நடிகர், நடிகைகளை வசப்படுத்தியுள்ளார். சுகேஷ் குறித்து தகவல் தெரிந்ததும் நடிகை நோரா பதேஹி தொடர்பை முறித்துக் கொண்டார். ஆனால், சுகேஷுடனான தொடர்பை ஜாக்குலின் முறித்துக் கொள்ளவில்லை’’ என்றார்.
மேலும் சுகேஷை கனவு நாயகன் என்றே நடிகை ஜாக்குலின் அழைத்து வந்த தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.