புதுடெல்லி: சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி போட்டோ எடுத்த போது அவர் பயன்படுத்திய கேமராவின் ெலன்ஸ் மூடப்பட்டிருந்ததா? என்பது குறித்து திரிணாமுல் எம்பியின் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் 8 சிவிங்கி புலிகளை விடுவித்தார்.
அப்போது அவர் தனது கையில் வைத்திருந்த கேமராவில் சிவிங்கி புலிகளை புகைப்படம் எடுத்தார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. பிரதமர் ேமாடியை கேலி செய்யும் விதமாக அவர் வைத்திருந்த கேமராவை ‘மார்பிங்’ செய்து அந்த புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சர்க்கார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவர் வெளியிட்ட மார்பிங் படத்தில், மோடி வைத்திருந்த கேமராவின் லென்ஸ் மூடியிருப்பதும், அதன் மீது கவர் ஒன்றும் இருப்பதும் தெரிகிறது.
இதற்கு மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அளித்த பதிலடி பதிவில், ‘திரிணாமுல் எம்பி வெளியிட்ட மார்பிங் புகைப்படத்தில், நிகான் கேமராவிற்கு கேனான் கேமரா மூடியை வைத்து மறைத்துள்ளார். குறைந்தபட்ச பொது அறிவு உள்ளவர்களை மம்தா பானர்ஜி நியமிக்க வேண்டும். போலிப் பிரசாரத்திற்காக கையாளப்படும் மோசமான முயற்சியாகும்’ என்று கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் தான் பதிவிட்ட புகைப்படத்தை திரிணாமுல் எம்பி ஜவஹர் சர்க்கார் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.