சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து கார்த்தி பேசினார்.
தமிழ்த் திரையுலகின் பொக்கிஷம்
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் அடுத்தடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதன்படி, சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் நடித்த அனுபவங்களை கார்த்தி பகிர்ந்து கொண்டார்.
சோழத் தூதுவனாக மிரட்டிய கார்த்தி
செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மேக்கிங்கில் பட்டையைக் கிளப்பியிருந்தது. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். கார்த்தி இந்தப் படத்தில் சோழத் தூதுவனாக நடித்து பிரமிக்க வைத்தார். படம் வெளியான போது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், இப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விரைவில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வரும் என செல்வராகவனும் கூறியுள்ளது, இன்னும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
செல்வராகவன் அசுரத்தனமான காட்டேரி
இந்நிலையில், பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பொன்னியின் செல்வன் மணிரத்னம் – ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் இருவருக்குமான வித்தியாசம் என்னவென்று கார்த்தியும் பார்த்திபனும் பேசினார். அதில், “செல்வராகவனையும் மணிரத்னத்தையும் கம்பேர் பண்ணும் போது, செல்வராகவன் ஒரு அசுரத்தனமான காட்டேரி. ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் செல்வராகவன் யோசித்துக்கொண்டே இருப்பார். காட்சியின் தேவைக்கு ஏற்ப திடீர்ன்னு ஷாட்டை மாற்றுவார், நைட் 2 மணிக்கு எழுப்பி டான்ஸ் ஆட சொல்லுவார். அவரையும் மணிரத்னத்தையும் கம்பேர் பண்ணவே முடியாது” எனக் கூறினர்.
மணிரத்னம் ஸ்டைலே வேற லெவல்
தொடர்ந்து பேசிய அவர்கள், “செல்வராகவனை விட மணிரத்னம் வேற மாதிரியான ஸ்டைலில் படம் எடுப்பார். சீன்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே தெளிவா இருப்பார் மணிரத்னம். அவரு சொன்னா யானை, குதிரை கூட நாலு ஸ்டெப் பின்னாடி போகும். செல்வராகவனையும் மணிரத்னத்தையும் கம்பேர் பண்ணவே முடியாது. ஆனால், இரண்டு பேருமே பெஸ்ட் தான்” என கார்த்தியும் பார்த்திபனும் பேசினர். பொன்னியின் செல்வன் குறித்து கார்த்தி, பார்த்திபன் பேசிய அனுபவங்கள், அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.