தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசுக்கு பறந்த கோரிக்கை!

ப்ளூ காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில், “ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வந்துள்ளன.

“ப்ளூ” காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட வேண்டுமென்றால் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரோ அல்லது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், இங்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

“ப்ளூ” காய்ச்சல் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்ற இந்த சூழ்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும்; இதனைத் தடுப்பதற்குத் தேவையான மருந்துகளை பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வழங்கவும், இந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ப்ளூ காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், ‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதற்கேற்ப, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.