திருப்பூர்: தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறியதாவது: ”பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, மதச்சார்பின்மை, சோசலிசம் போன்ற வார்த்தைகளை அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது அவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்த வழக்கா அல்லது பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கா என்று தெரியப்படுத்த வேண்டும்.
சுப்ரமணியசாமி தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுத்திருந்தால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். பாஜக ஒப்புதலுடன் அந்த வழக்கு தொடுத்திருந்தால் பாஜகவை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுவதாக உறுதிமொழி ஏற்றுத்தான் செயல்பட வேண்டும். நாட்டு மக்களின் ஒற்றுமையை இது சீர்குலைப்பதாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயர்ந்த கொள்கையை பின்பற்றுவதற்கு அடிப்படை நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டமாகும். நமது அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழ்நிலையில், தமிழக அரசு சார்பில் மருந்து, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது தமிழக மக்கள் வசிக்கும் இடங்களை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது.
எனவே தமிழக மக்கள் வசிக்கும் இடங்களை விட்டு ராணுவம் வெளியேற வேண்டும். தமிழர்களின் உரிமைகள், உடைமைகளை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதோடு, இலங்கையில் உள்ள தமிழக மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திருப்பூரில் நடந்த மாநிலக்குழுக் கூட்டத்தில் 31 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும், 9 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி ஆகியோர் மாநில துணைச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக்குழுவில் 3 பெண்கள் உள்பட 15 பேர் புதியவர்கள். செயற்குழுவில் இருவர் பெண்கள். மாநிலப் பொருளாளராக எம்.ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கே.சுப்பராயன் எம்.பி., மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.இசாக் ஆகியோர் உடனிருந்தனர்.