ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
‘காட்ஃபாதர்’ படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் பற்றியும், ஓடிடி ரைட்ஸ் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
கம்பேக் கொடுக்க காத்திருக்கும் மெகாஸ்டார்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, மெகா ஸ்டார் என கொண்டாடப்படுகிறார். இவரது படங்களை டோலிவுட் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி மகிழ்வது வழக்கம். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், இந்தி, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர் சிரஞ்சீவி. அவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘ஆச்சார்யா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், சிரஞ்சீவி நடித்துள்ள ‘காட்ஃபாதர்’ அவருக்கு சூப்பர் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரஞ்சீவிக்கு கை கொடுக்கும் சல்மான் கான்
காட்ஃபாதர் படத்தை நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் பிரமண்டமான வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கிய முதல் படமான லூசிபரில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், லூசிபரில் பிருத்விராஜ் நடித்த கேரக்டரில் கேமியோ ரோல் செய்துள்ளார். .
காட்ஃபாதர் ரிலீஸ் தேதியில் மாற்றமா?
பொலிட்டிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள காட்ஃபாதர் படத்தில், சிரஞ்சீவி, சல்மான் கான் ஆகியோருடன் நயன்தாராவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ், பல வருடங்களுக்குப் பிறகு ‘காட்ஃபாதர்’ படத்தை இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில எதிர்பாராத காரணங்களால் இப்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
காட்ஃபாதர் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி
மலையாளத்தில் வெளியான ‘லூசிபர்’ சூப்பர் ஹிட் அடித்ததால், தெலுங்கில் காட்ஃபாதரும் தரமான சம்பவம் செய்யும் என கூறப்படுகிறது. இதனால், காட்ஃபாதர் படத்தின் ஓடிடி உரிமைக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியாக நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸை வாங்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாவில்லை. அதேபோல், ஓடிடி உரிமைக்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தது எனவும் இதுவரை தகவல் இல்லை.