தைபே: தைவானின் யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்சர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதால், சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவானின் யுஜிங்கில் இருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள், சாலைகள் குலுங்கியுள்ளன. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பலரும் பீதியில் சாலைக்கு ஓடி வந்துள்ளனர். மிகவும் சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், பாலங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. பாதைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் பாதிப்பு
இதுமட்டுமல்லாமல் சிக் மற்றும் லியுஷிஷி மலைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் நிலநடுக்கத்தால் பாறைகள் உருண்டுள்ளன. இதனால் அப்பகுதியாக பயணித்த 600க்கும் மேற்பட்டோர், வேறு எங்கும் நகர முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் பாறைகள் உருண்டதால் 3 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தைவான் தொலைக்காட்சிகளில் செய்திகள் கூறுகின்றன.
தொடர்ந்து நிலநடுக்கம்
அதேபோல் தைவானின் தென் கிழக்கு பகுதியில் நேற்று முன் தினமும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் டைகளின் அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அதிர்வினால் கீழே விழுந்துள்ளன. நிலநடுக்கத்தால் கவுஷியுங்க் நகரின் மெட்ரோ ரயில் சேவை உடனே நிறுத்தப்பட்டது. இதன் அதிர்வுகள் தைபேயிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள்
அடுத்தடுத்த நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இரண்டு டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் தீவு அமைந்திருப்பதால் தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு தரப்பில் மீட்புப் பணிகளுக்கு ஏற்ப நவீன முறையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன
சுனாமி எச்சரிக்கை
அதேபோல் தைவான் கடற்கரையில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் எழக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஒகினாவா மாகாணத்தில் உள்ள கடற்கரை பகுதியில் 1 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் வரலாம் என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.