திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ெதரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு திண்டுக்கல் ஜிஹெச்சில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க குடும்ப கட்டுப்பாடு பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் தினம்தோறும் நாய்களால் பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர். குறிப்பாக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அதில் நோய் வாய்பட்ட நாய்களும் அடங்கும். காலையில் நடைப்பயிற்சி செய்வோர், பள்ளி செல்லும் மாணவர்களை என எந்த பாகுபாடு இன்றி நாய்கள் விரட்டி கடிக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் சராசரியாக சுமார் 30 பேரை நாய்கள் கடித்து குதறி வருகின்றன.
மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனங்களின் குறுக்கே விழுவதால் பலரும் விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் என்பவர் கூறியதாவது, ‘நான் வத்தலக்குண்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ரோட்டின் குறுக்கே ஓடி வந்ததால் நான் விபத்தில் சிக்கினேன். இதனால் எனது கையில் முறிவு ஏற்பட்டது. என்னை போல் பலரும் நாய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெருக்களின் நாய்கள் சிறுவர்கள், பெரியோர்கள் என அனைவரையும் கடித்து குதறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
ஒரு வாரத்தில் மட்டும் 35 கு.க: இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம் தெரிவித்ததாவது:திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நாய்களை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று மற்றும் நிதி பற்றாக்குறையால் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதனடிப்படையில் தற்போது நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது.கடந்த வாரம் முதல் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தும், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டுள்ளது. இந்த குடும்ப கட்டுப்பாட்டு பணியை வேகப்படுத்தி அதிகளவு நாய்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாய் ஒன்றுக்கு ரூ.350 வரை செலவாகிறது’ என்றார்.