தென்காசி: சாதி பிரச்சினை காரணமாக கடையில் குழந்தைகளுக்கு பொருட்களை விற்க மறுத்து, அதை வீடியோவாக வலைதளத்தில் பரப்பிய கடைக்காரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு குழந்தைகள் சிலர் தின்பண்டங்கள் வாங்க வந்துள்ளனர். ஆனால், கடைக்காரர் அவர்களுக்கு பொருட்கள் விற்க மறுத்து, அதை வீடியோவாக பதிவு செய்து, சமூக ஊடகத்தில் பரப்பியுள்ளார். இது வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், கரிவலம் வந்தநல்லூர் போலீஸார் அந்த கிராமத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில், வீடியோ பதிவு செய்து வெளியிட்டது அந்த பகுதியில் கடை வைத்துள்ள மகேஸ்வரன் என்பதும், அவர் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2020-ம் ஆண்டு பாஞ்சாங்குளம் கிராமத்தில் இரு சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட ராமச்சந்திரன் (20) என்பவர், ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது வழக்கு நிலுவையில் இருந்ததால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், அந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படாததால் கடைக்காரர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ஊர்க் கூட்டம் நடத்தி, எதிர் தரப்பு மக்களுக்கு தங்கள் கடையில் பொருட்கள் விற்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். இதையே வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதன் அடிப்படையில், கரிவலம் வந்தநல்லூர் போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, ராமச்சந்திரன், மகேஸ்வரனை கைது செய்தனர். தென்காசி ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின்பேரில், கடைக்கு சீல் வைக்கப்பட்டது.