திருமலை: ஐதராபாத் இணைப்பு தினத்தை ஒன்றிய அரசும், தெலங்கானா அரசும் 2 பெயர்களில் தனித்தனியாக கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிஜாம் மன்னரிடம் இருந்து ஐதராபாத் சமஸ்தானம் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட செப்டம்பர் 17ம் தேதியை, விடுதலை தினமாக பாஜ கொண்டாடுகிறது. இதனை தேசிய ஒருமைபாட்டு தினமாக தெலங்கானா மாநில அரசு கொண்டாடுகிறது. இதன்படி, முதல்வர் சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள துப்பாக்கி பூங்காவில் அஞ்சலி செலுத்தி தேசியக்கொடியை ஏற்றினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செகந்திராபாத்தில் உள்ள பேரணி மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடினார்.
அதில் பேசிய அமித்ஷா, ‘தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிராவின் சில பகுதிகள் செப்டம்பர் 17ம் தேதிதான் சுதந்திரம் பெற்றன. ஆனால், ஒட்டு வங்கி அரசியலுக்கு பயந்து, பல ஆண்டுகளாக இந்த விடுதலை தினத்தை எந்த அரசும் நடத்தவில்லை. இந்தாண்டு இந்த விடுதலை தினத்தை கொண்டாடும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார். ’’ என்றார்.ஒரே நிகழ்ச்சியை இருவேறு பெயர்களில் தெலங்கானா அரசு சார்பில் சந்திரசேகர ராவும், ஒன்றிய அரசு சார்பில் அமித்ஷாவும் நேற்று போட்டி போட்டு கொண்டாடியது பரபரப்பை ஏறபடுத்தியது.
*பாதுகாப்பில் குளறுபடி
செகந்திராபாத்தில் அமித்ஷா தனது நிகழ்ச்சியை முடித்து சென்றபோது. அவருடைய பாதுகாப்பு வாகனங்களின் குறுக்காக ஒரு கார் பழுதாகி நின்று இருந்தது. அமித்ஷாவின் பாதுகாப்பு வீரர்கள் அந்த காரின் கண்ணாடியை உடைத்து, காரை அகற்றினர். இந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து ஐதராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.