தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த குழந்தைகளுக்கு பெட்டி கடையில் தின்பண்டம் கொடுக்காமல், ” ஊருக்குள் கட்டுப்பாடு உள்ளதால் உங்களுக்கு பொருட்கள் கொடுக்கக்கூடாது” என்று மாற்று சாதியினர் செய்த இழிவான செயலுக்கு மாநிலம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. சம்மந்தப்பட்ட கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்ததுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், இரு வேறு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசி பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது.
தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.” இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.