புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் பாஜக ஆம் ஆத்மியை நசுக்கப் பார்க்கிறது என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடந்தது. இதில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக வரவேற்பு உள்ளது. இதனை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே ஆம் ஆத்மி அமைச்சர்கள், தலைவர்கள் மீது பாஜக பொய்யான வழக்குகளைப் போடுகிறது. குஜராத் தேர்தல் தோல்வி பயத்தால் ஆம் ஆத்மியை நசுக்கத் துடிக்கிறது பாஜக.
மேலும் குஜராத் தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்கள், கூட்டங்கள் என எதையுமே ஒளிபரப்பக்கூடாது குஜராத் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நேரடி ஆலோசகர் ஹிரன் ஜோஷியே இந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். ஊடக ஆசிரியர்களிடம் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளது. மீறி ஆம் ஆத்மி செய்திகளை வெளியிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹிரன் ஜோஷி இத்தகைய மிரட்டல்களை நிறுத்திக் கொள்வது நல்லது. ஒருவேளை ஊடக ஆசிரியர்களில் யாரேனும் ஒருவர் ஹிரன் ஜோஷியின் குறுந்தகவல்களைப் பகிர்ந்தாலும் கூட போதும் அவரும், பிரதமரும் வெளியில் முகம் காட்ட முடியாத சூழல் உருவாகும்.
குஜராத்தில் ஆம் ஆத்மி தான் ஆட்சி அமைக்கும். இலவச கலாச்சாரத்தை நாங்கள் கடைபிடிப்பதாக பிரதமர் விமர்சிக்கிறார். அதனால் நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிடும் எனக் கூறுகிறார். அறமற்ற, ஊழல் நிறைந்த, துரோகிகள் மட்டுமே இலவசங்கள் தேசத்துக்கு நல்லதல்ல என்பார்கள். அப்படியாக இலவசங்களை விமர்சித்து எந்த ஒரு அரசியல்வாதியாவது பேசினால் நீங்கள் அவரின் நோக்கம் தவறானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
ஆம் ஆத்மி கணக்கு: குஜராத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்கு பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவதே தங்களின் இலக்கு என்று பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் அண்மையில் அளித்தப் பேட்டி ஒன்றில் பாஜக மீது மக்கள் எதிர்ப்பலைகள் இருப்பதைப் பற்றி பேசியிருந்தார். குஜராத் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அங்கே பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவும், ஆம் ஆத்மி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர் வீட்டுக்குச் சென்று உணவருந்துவது, கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்டதற்கு ஆவேசமடைந்து தோள் கொடுப்பது என ஆம் ஆத்மி குஜராத்தில் தன்னை வலுப்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.