போபால்: இந்தியாவுக்கு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பிறகு சிவிங்கி (Cheetah) வகை சிறுத்தை புலிகள் வந்து சேர்ந்துள்ளன. பிரதமர் மோடி இதனை மத்தியப் பிரதேச தேசிய பூங்காவுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்த சிறுத்தைகளை திறந்து விட்ட பின்னர் அவற்றை புகைப்படம் எடுத்தார். ஆனால் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
அதாவது இந்த புகைப்படத்தில், பிரதமர் மோடி சஃபாரி தொப்பியுடன் கையில் கேமிராவுடன் காட்சியளித்தார். இந்த கேமிராவில்தான் பஞ்சாயத்து. நிக்கான் கேமிராவில், கெனான் நிறுவனத்தின் கவர் இருந்துள்ளது. இந்த புகைப்படத்தை விமர்சித்து பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
சீட்டா
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தையொட்டி நமீபியாவிலிருந்து 8 சீட்டா சிறுத்தை புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் 1952க்கு பின்னர் இந்த புலி இனம் இல்லை. அதற்கு முன்னதாகவே மன்னர்களால் வேட்டையாடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்த புலி இனத்தை இந்தியாவில் மறு அறிமுகம் செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது. இதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்த நிலையில் நேற்று ‘குனோ’ தேசிய உயிரியல் பூங்காவில் இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி திறந்துவிட்டார்.
நிகான் கேமிராவில் கெனான் லென்ஸ் கவர்
இந்தியாவில் அழிக்கப்பட்ட ஓர் உயிரினம் மீண்டும் நாடு திரும்பியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வேறு மாதிரியாக வேகமாக பரவியது. அதாவது, பிரதமர் மோடி இந்த சிறுத்தைகளை திறந்து விட்டு புகைப்படம் எடுத்திருந்தார். அப்போது அவர் பயன்படுத்திய கேமிரா நிகான் நிறுவனத்தை சேர்ந்ததாகும். ஆனால் இந்த கேமிராவின் லென்ஸ் கவர் ‘கெனான்’ நிறுவனத்தை சேர்ந்ததாக இருந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பகிர்ந்த படம்
இந்த படம்தான் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்கார் இந்த படத்தை பகிர்ந்து, “எல்லா புள்ளிவிவரங்களையும் மறைத்து வைத்திருப்பது இருக்கட்டும், ஆனால் கேமிராவின் லென்ஸ் மூடி வைக்கப்பட்டிருப்பதுதான் தொலைநோக்கு பார்வை” என்று கிண்டலாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அக்கட்சியினர் பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து விமர்சிக்கத் தொடங்கினர்.
போலி படம்
ஆனால் பாஜவினர் இதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இப்பிரச்னையை தீர்க்க, படம் குறித்த உண்மைத் தன்மை ஆராயப்பட்டது. அதில் இப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து டிவிட்டரில், “திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்கார் எடிட் செய்யப்பட்ட படத்தை பகிர்ந்திருக்கிறார். போலி பிரசாரத்தை பரப்பும் முயற்சி இது. குறைந்தபட்ச பொது அறிவு கொண்டவர்களை எம்பியாக நியமியுங்கள் மமதா பானர்ஜி” என பாஜக தலைவர்களில் ஒருவரான தலைவர் சுகந்தா மஜும்தார் குறிப்பிட்டுள்ளார்.