தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் இரு சமூகத்தினரிடையே கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், அண்மையில் யாதவர் சமூகத்தை சேர்ந்த கே. ராமகிருஷ்ணன் என்பவருக்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் மீதான வழக்கு காரணமாக பணியில் சேர முடியவில்லை. இதையடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்து, யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எஸ்சி சமூக மக்களிடையே வழக்கை வாபஸ் பெறுமாறு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு, ராமகிருஷ்ணனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிலர் அவர்கள் சமூகத்துடன் கூட்டம் நடத்தி உள்ளனர். அந்த கூட்டத்தில், எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொருட்கள் ஏதும் விற்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கடையில் தின்பண்டம் வாங்க சென்றுள்ளனர். அப்போது அந்த கடைக்காரர் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என்றும், இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் எனவும் கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பல்வேறு தரப்பிடமிருந்தும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 2 பேரை கைது செய்தனர். தென்காசி காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் கூறுகையில், “வீடியோவில் பேசிய நபரை அடையாளம் கண்டுவிட்டோம். வெள்ளிக்கிழமை கைது செய்ய முயன்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். ஆனால், சனிக்கிழமை நேற்று (செப்.17) கைது செய்துவிட்டோம்.
கடை உரிமையாளர் மற்றும் உள்ளூர் யாதவர் சமூகத்தின் தலைவர் எஸ். மகேஸ்வரன், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“