போபால்: மத்திய பிரதேசத்தின் ஷியோ பூரில் உள்ள கரஹாலில் நேற்று நடைபெற்ற சுய உதவி குழு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது சுய உதவிக் குழு பெண்களுக்கு பல் வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:
புதிய இந்தியாவில் ஊராட்சியில் தொடங்கி குடியரசுத் தலைவர் மாளிகை வரை பெண்களின் சக்தி கொடி கட்டி பறக்கிறது. மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 17,000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது ஒரு பெரிய மாற்றத்தின் அடையாளம்.
நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான சகோதரிகள் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர். சுமார் 2 கோடி பெண்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுய உதவிக்குழுக்கள் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான பொருட்களை சந்தைகளில் விற்பனை செய்துள்ளன. பிரதமரின் வன்தன் யோஜனா, பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா ஆகிய திட்டங்களின் பலன்களும் பெண்களை நேரடியாக சென்றடைகின்றன.
கடந்த 2014 -ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது முதல் பெண்களின் கண்ணியத்தை உயர்த்தவும், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதற்கும் மத்திய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 9 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட் டிருக்கிறது. குடிநீர் குழாய் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது.
மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.11,000 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்துக்கு மட்டும் ரூ.1,300 கோடி வழங்கப் பட்டிருக்கிறது.
இன்று எனது பிறந்த நாள். அரசு அலுவல்கள் காரணமாக இந்த நாளில் என்னை பெற்றெடுத்த தாயை சந்தித்து ஆசி பெற முடியவில்லை. எனினும் இங்கு கூடியிருக்கும் பழங்குடி தாய்மார்கள் என்னை ஆசீர்வதிக்கின்றனர். லட்சக்கணக்கான பழங்குடி தாய்மார்களின் ஆசி எனக்கு கிடைத்திருக்கிறது. இதை பார்த்து எனது தாய் பூரிப்படைவார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.