டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கோட்வார் நகர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலையின்மை என்பது நமது நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவறான பாதைகளில் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் குறி வைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
போஸ்டர்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டங்களில் உள்ள கோட்வார் நகரில் ஒரே நாளில் இரவு முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் ஆண் துணை வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றும் இதற்கு விருப்பப்பட்டவர்கள் மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி செல்போன் எண் ஒன்றும் கொடுக்கப்பட்டு இருந்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் ஸ்டேஷன்
கோட்டுவார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் என ஒரு இடத்தை விடாமல் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி கோட்டுவார் போலீஸ் நிலையத்தின் வளாகங்களிலும் கூட இந்த பிளே பாய் போஸ்டரை அவர்கள் ஒட்டி உள்ளனர். இதைக் கண்டு பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
பிளேபாய் வேலை
நகரின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், “பிளேபாய் வேலைகள் ஆட்கள் தேவை! எஸ்கார்ட் நிறுவனத்தில் சேருவதன் மூலம் சிறுவர்கள் தினசரி ரூ. 5,000-10,000 சம்பாதிக்கலாம்” என்று அதில் உள்ளது. மேலும், அதற்கு எனத் தனியாக எண்ணையும் கொடுத்து உள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் விசாரித்து வரும் நிலையில், அந்த மொபைல் எண் ஸ்வாட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எங்கே
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சுவரொட்டிகள் பற்றி அங்குள்ள மக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். நாங்கள் போஸ்டரில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கு கால் செய்து பார்த்தோம். ஆனால், அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, விசாரணையைத் தொடங்கி உள்ளோம். அந்த மொபைல் எண் கடைசியாக எங்கு இருந்தது கண்டுபிடிக்க முயன்றோம். அது டெல்லி-ஹரியானா எல்லையில் இருந்தது” என்றார்.
போலீசார்
இது தொடர்பாக கோட்வார் இன்ஸ்பெக்டர் விஜய் சிங், “இதுவரை யாரும் இந்த விவகாரத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், நாங்கள் தானாக முன்வந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கண்டுபிடித்து. அவர்கள் கைது செய்வோம்” என்று அவர் தெரிவித்தார்.