பீஜிங்: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர்களின், பீரங்கி குண்டு வடிவிலான 2 பெரிய முட்டைகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஒன்று டைனோசர். ஆனால் இந்த உயிரினம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமான டைனோசர் விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு
இதனால் உண்மையில் டைனோசர் இனம் இருந்ததா? என்பது குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர். இதற்காக தற்போது டைனோசர் பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடயங்களை திரட்ட விஞ்ஞானிகள் குழுவினர் முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தான் சீனாவின் ஜாங்ஜியாகோவ் மாகாணத்தின் சில இடங்களில் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப்படும் டைனோசர்களின் கால் தடம் தென்பட்டுள்ளாதாக ஆய்வாளர்கள் கூறினர்.
டைனோசர் கால் தடம்
சீனாவின் ஹபேய் பகுதியில் டைனோசரின் கால் தடங்கள் இருந்ததாகவும்.. 4,300 கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த தடயங்கள் மூலம் டைனோசர்களின் உயரம், அதன் எடை மற்றும் அது நடக்கும் வேகம் ஆகியவற்றை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்ததோடு அது குறித்து ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் அந்த பகுதிகளில் தொடர்ந்து டைனோசர் தொடர்பான வேறு ஏதும் தகவல்கள் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு
இந்த நிலையில், சீனாவில் அன்குய் மாகாணத்தின் கியான்ஷான் படுகையில் டைனோசர்களின் 2 புதைபடிவ முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு முட்டைகளும் பீரங்கி குண்டு அளவில் இருந்ததாகவும், அந்த டைனோசர் முட்டையில் கால்சைட் படிகங்களால் நிரம்பியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக டைனோசரின் இறுதிக்காலமான கிரெட்டேசியஸ் காலத்தை சேர்ந்ததாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முட்டைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
எப்படி கண்டுபிடிக்கப்பட்டது
இது தொடர்பான விவரங்கள் ஜர்னல் ஆஃப் பேலியோஜியோகிராஃபி என்ற இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் வெளிவந்துள்ளது. இந்த முட்டைகள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து விவரித்த அதிகாரிகள், ‘பெரிய அளவிலான முட்டை போன்று இருந்ததாகவும், முட்டை ஓடு அலகுகளின் இறுக்கமான அமைப்பு மற்றும் அவற்றின் தனித்துவமான கோள வடிவத்தை வைத்து தான் இது டைனோசனின் முட்டையாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு முட்டைகளும் 4.1 முதல் 5.3 அங்குலம் நீளம் மற்றும் 3.8 முதல் 5.2 அங்குலம் அகலம் கொண்டது என்று கூறப்படுகிறது.
தாவர உண்ணி டைனோசரா
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டைகள் ஆர்னிதோபாட் வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ”ஆர்னிதோபாட் வகை என்பதால் இந்த டைனோசர்கள் தாவர உண்ணியாக இருக்கலாம். மேலு இது சிறிய வகை டைனோசராக தான் இருக்கும் என தெரிகிறது. காலநிலை மாற்றத்தால் இந்த முட்டையின் பெரும்பகுதி சேதமடைந்த நிலையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முழு ஆராய்சி மேற்கொண்ட பின்னர் தான் முழுமையாக கூற முடியும்” என்று கூறியுள்ளனர்.