பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், புதர்கள் சூழ்ந்த நிலையில் ஊர் பெயர்களுடன் கூடிய அறிவிப்பு பலகையை பராமரிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளான, பாலக்காடுரோடு மற்றும் உடுமலைரோடு, தாராபுரம்ரோடு, வால்பாறைரோடு, கோவைரோடு மட்டுமின்றி கிராமபுற ரோட்டோரத்திலும் சுமார் 15ஆண்டுகளுக்கு முன்பு வரை, கான்கிரிட்டாலான ஊர்பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. ரோட்டிலிருந்து குறிப்பிட்ட மீட்டர் தூரத்துக்கு இந்த பெயர்கள் எழுதப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக, பல இடங்களில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டதால், சில கான்கிரீட்டாலான பெயர் பலகை அப்புறப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், இன்னும் பல கிராமபுற ரோட்டோரம் கான்கிரீட்டாலான பெயர் பலகைகள் உறுதியுடன் உள்ளது.ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஊர்பெயர் கூடிய அறிவிப்பு பலகை மட்டுமின்றி, அன்மை காலமாக பல இடங்களில் அமைக்கப்பட்ட டிஜிட்டலான பெயர் பலகைகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிலும், பல அறிவிப்பு பலகைளில் புதர்கள் சூழ்ந்து, எந்த ஊர் பெயர் என தெரியாத அளவிற்கு உள்ளது.
அதிலும், தாராபுரம் ரோடு, பாலக்காடுரோடு உள்ளிட்ட முக்கியரோட்டோரம், அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதாக புகார் எழுகிறது. எனவே, அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்ட ஊர்பெயர் அறிவிப்பு பலகைகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்வதுடன், புதர்களை அப்புறப்படுத்தி சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.