புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரும் சீமான்

இரட்டைமலை சீனிவாசனின் 77 வது நினைவு நாளை முன்னிட்டு காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள ரெட்டைமலை சீனிவாசன் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்றும் புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என்றார். தென்காசி, பாஞ்சாகுளம் கிராமத்தில் குழந்தைகளிடம் ஜாதி பாகுபாடு காட்டும் செயல் குறித்து சமூகநீதி, பெரியார் மண் என்று பேசக்கூடிய அரசிடம் இதை பற்றி கேட்க வேண்டும் எனவும், கலைஞருக்கு பேனா வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்ற கேள்விக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தால் அதை நாங்கள் அனுமதிக்க வேண்டுமா? என்று சீமான் கேள்வி எழுப்பினார். 

குழந்தைகளுக்கு உணவளித்து படித்து வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அரசியலுக்காக செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம் என தெரிவித்த அவர், குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டு உடனேயே கை கழுவி விட்டார் தமிழக முதலமைச்சர், அதுதான் மாடல் அரசு.. மாடல் என்பது நடிப்பது என்றார் அவர்.

எந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகன்கள், பேரன்களாவது அரசு பள்ளியில் படிக்கிறார்களா என கேள்வி எழுப்பிய அவர், அந்த அளவு தரமில்லாமல் தான் அரசு பள்ளிகள் உள்ளதாகவும், அதேபோல் தான் மருத்துவமனைகளும் எனவும், நீங்கள் நடத்தும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா ஏன் அப்போலோ மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றார், அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று இருந்தால் மக்களுக்கு மருத்துவமனையின் மீது நம்பிக்கை வந்திருக்கும் என்ற சீமான், தமிழக அரசின் காலை உணவு திட்டம் முதலமைச்சரின் பேரன் உள்ளிட்ட அமைச்சர் பிள்ளைகளும் காலை உணவு திட்டத்தில் அமர்ந்து சாப்பிட சொல்ல வேண்டும் என்றார் சீமான்.

மஞ்சப்பை என்ற திட்டம் ஒரு நாள் தான் செயல்பட்டது இப்போது எங்கு சென்று விட்டது இதுதான் மாடல் அரசு என்ற அவர், தமிழகத்தில் நான்கு முதலமைச்சர் ஆட்சி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு அவருக்கு கணக்கு தெரியவில்லை, தவறாக கூறுகிறார் என்றார்.

அதிமுக எந்த மக்கள் பிரச்சனைக்கு வந்தது, அதிமுகவின் நிலைபாடு என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், பல ஆண்டுகளாக பேசியதை தான் ஆ.ராசா பேசினார், அதைத் தான் அவர் எடுத்து சொன்னார், என்னவோ அதை அவர் புதிதாக பேசியதை போல சொல்கிறார்கள்.தீண்டாமை என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது அதைத்தான் ஆ. ராசா எடுத்து சொல்லி இருக்கிறார் என்றார்.

நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்தே கோவிலுக்குள் செல்ல முடியவில்லை, ஆ ராசாவுக்கு ஆதரவாக திமுக பேசாது, ஆனால் நாங்கள் பேசுவோம் என்றார் நாம் தமிழகர் கட்சியின் தலைவர் சீமான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.