புதுச்சேரி: முறைப்படி உத்தரவு இல்லாமலும் அலுவலக ஆணைப்படியும் “சர்வீஸ் பிளேஸ்மென்ட்” அடிப்படையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பணிபுரியும் பல நூற்றுக்கணக்கான ஊழியர்களை திரும்ப அவரவர் பணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர், தலைமைச் செயலரிடம் மனு தரப்பட்டுள்ளது.
துறை செயலரின் உத்தரவின்றி ஆணை பிறப்பித்து அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 43 பேர் அங்கு பணியில் இல்லாதது அண்மையில் அங்கு விஷம் தரப்பட்ட சிறுவன் உயிரிழந்தபோது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடன் பணிக்கு சேரவிட்டால் ஊதியம் தரக்கூடாது என்று காரைக்கால் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுபோல் பல துறைகளிலும் சர்வீஸ் பிலேஸ்மென்ட் அடிப்படையில் பல நூற்றுக்கணக்கானோர் பணி புரிவதால் துறைகளில் பணியில் உள்ள ஊழியர்கள் கடும் பணிச் சுமைக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், பொதுப்பணி துறை செயலர் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
“புதுச்சேரியில் புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை “சர்வீஸ் பிளேஸ்மெண்ட்” அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பணி பாதிக்கப்படுவதோடு, அரசு நிதி பல கோடி வீணடிக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெற்று அப்போதைய துணைநிலை ஆளுநரிடம் புகார் அளித்ததின் பேரில், துறை செயலரின் உத்தரவு இல்லாமல் “சர்வீஸ் பிளேஸ்மெண்ட்” அடிப்படையில் பணிபுரிய ஊழியர்களை அனுப்பக்கூடாது என 14.3.2019 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மீண்டும் தற்பொழுது சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் பலர் பணிபுரிந்து வருவதை அறிந்து பொதுப்பணித்துறை, கல்வித்துறை, குடிசை மாற்று வாரியம் , பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் ஆகிய துறைகளில் ஆர்டிஐ மூலம் தகவல்களாக கேட்டதற்கு அவர்கள் 23 பேர் பணிபுரிவதாக தெரிவித்தனர்.
அதே நேரத்தில் அலுவலக ஆணையில்லாமல் வெள்ளை பேப்பரில் அதிகாரிகள் கையெழுத்திட்டு அங்கீகாரமில்லாமல் பொதுப்பணித்துறையில் எம்டிஎஸ், வவுச்சர் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லாது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் , முன்னாள் அமைச்சர்களிடமும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் அரசு நிதி கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இதுபோல் அலுவலக ஆணைப்படியும், முறைப்படி உத்தரவு இல்லாமலும் சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களையும் திரும்ப அவரவர் பணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துறை செயலரின் உத்தரவின்றி அலுவலக ஆணை பிறப்பித்து சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அடிப்படையில் பணிபுரிய அனுப்பிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.