புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 705 குழந்தைகள் வந்ததாகவும், உட்புற சிகிச்சை பிரிவில் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகமாக இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
குழந்தைகளுக்கு மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் வரும் 25ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி மட்டும் 192 குழந்தைகள் ராஜிவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினமும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 705 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறுகையில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ள வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு 270 குழந்தைகளும், அவசர சிகிச்சை பிரிவுக்கு 410 குழந்தைகளும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு 15 குழந்தைகளும், அவசர சிகிச்சை பிரிவுக்கு 10 குழந்தைகளும் என மொத்தம் 705 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்துள்ளன. காய்ச்சல் பரவாமல் இருக்க பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றார்.