காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம்தான் அங்கம்பாக்கம். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் சிறப்பு அம்சமே, பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்ல புலியாட்டத்திலும் கலக்கி வருகின்றனர். பள்ளியின் மாணவர்களை புலியாக மாற்றுவது அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சேகர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலியாட்டம் சார்ந்த பல்வேறு போட்டிகளில், அம்மாணவர்கள் பரிசுகளை குவித்து வருகின்றனர். 2017ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழாவில் இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெங்கடேஷ், சஞ்சய் தினேஷ் தருண் பிரசாத் ஆகியோர் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
2019ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாநகரில் ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, எரி சக்தித்துறை இணைந்து நடத்திய இந்தியா இண்டர்நேஷ்னல் அறிவியல் திருவிழாவில் அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்கள் 10 பேர் பங்கேற்று அசத்தினர். இவர்களை இந்த போட்டிக்கு காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. இத்திருவிழாவில், பல மாநில மாணவர்கள் தங்கள் கலைத்திறனை காட்டினாலும், அனைவராலும் ரசிக்கப்பட்டது அங்கம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கிராமியக்கலையான புலியாட்டம்தான். இவர்களின் ஆவேச ஆட்டத்தை பார்த்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
மற்றவர்களின் மகிழ்ச்சியை தங்கள் மனதில் சுமந்து வந்த மாணவர்கள் அத்துடன், பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் பெற்று வந்து பள்ளிக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தனர். பரிசுகளோடு ஊர் திரும்பிய மாணவர்களை பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ் உட்பட கிராம மக்கள் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்று அழைத்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புறக்கலைகள் சங்கம் நடத்திய கலைப்பண்பாட்டு நிகழ்விலும் கலாம் யுவி அறக்கட்டளை நடத்திய முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் இப்பள்ளி மாணவர்கள் தங்களது புலியாட்டதிறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது பள்ளி மாணவர்கள் நித்தீஷ்வர், தீபன்ராஜ், சுரேந்தர், வருண்செல்வன், இனியவன், கமல்ராஜ், குமரன் ஆகியோரை கொண்ட புலியாட்டக்குழு பள்ளியில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறது. இந்த புலியாட்ட குழு மாணவர்களை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பலராமன், கண்ணன் பள்ளியின் தலைமையாசிரியர் தணிகைஅரசு, லதா, சீனுவாசன் குளோரி, கலைவாணன் பொற்கொடி உள்ளிட்ட ஆசிரியர்கள், அங்கம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் ஏழுமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வருகின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக புலி ஆட்டத்தின் புகழை தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பரப்பி வரும் அங்கம்பாக்கம் பள்ளி மாணவ, மாணவர்களை அக்கிராமமே பாராட்டி வருகிறது.
*விமானத்தில் பறந்து சென்று சாகசம்
மாணவர்களின் கலைத் திறனுக்கு சான்றாக இலவச விமான பயணத்துக்கு பள்ளியின் அறிவியல் ஆசிரியரும், தலைமையாசிரியரும், பள்ளியின் பிற ஆசிரியர்களும் ஏற்பாடு செய்தனர். கொல்கத்தாவிற்கு பறந்து சென்று புலியாட்டம் ஆடி மக்களின் மனதை கவர்ந்தனர்.
*இணையத்திலும் கலக்கல்
கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த போதிலும் இணைய வழியில் நடைபெற்ற கிராமியக்கலைகள் போட்டியிலும் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று புலியாட்டம் ஆடி சான்றிதழும் பரிசும் பெற்றுள்ளனர்.
*மாணவ செல்வங்களே…!
திங்களன்று வெளியாகும் இப்பகுதிக்கு கல்வி, விளையாட்டு, கலைப்பிரிவுகளில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் தனித்திறன் படைப்புகளை உங்களின் தலைமையாசிரியர் கையெழுத்துடன் அனுப்பி வைக்கலாம். புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சிறப்புடன் செயல்படும், தனித்துவமிக்க அரசுப்பள்ளிகள் குறித்த தகவல்களை, ஆசிரியர்கள் உரிய விபரங்களுடன் எழுதி படங்களுடன் அனுப்பி வைக்கலாம்.