அகமதாபாத்: பாஜக அரசு பெரும் முதலாளிகளின் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் இனிமேல் இக்கட்சியின் பெயர் பாரதிய கோடி கட்சி என்றும் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளது.
பஞ்சாப் மற்றும் டெல்லியில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
பாஜகவின் இந்த ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி அடைந்துவிட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. ஆனால், ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்று பாஜக கூறி வருகிறது.
பாஜக ஆம் ஆத்மி மோதல்
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பாஜகவை விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்து வருகிறது. இப்படி இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது. இதனால், அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.
கடவுளாக நினைக்கிறார்
இந்தக்கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்க பாஜக முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ”இரண்டு மாநிலங்களில் வென்று விட்டதால் கெஜ்ரிவால் தன்னை கடவுளாக கருதுகிறார்” என்று விமர்சித்து இருந்தார்.
285 எம்.எல்.ஏக்களை விலைக்கு
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்செய் சிங், பாஜகவை கடுமையாக சாடினார். சஞ்செய் சிங் கூறுகையில், ”நாடு முழுவதும் பாஜக 285 எம்.எல்.ஏக்களை கடத்தி விலைக்கு வாங்கியிருக்கிறது. ஊழல் மற்றும் கருப்பு பணத்த்தில் எத்தனை கோடிகள் செலவிடப்பட்டுள்ளது? என்பதை ஒட்டு மொத்த நாடும் அறிய வேண்டும். பாஜகவின் இன்றைய பெயர் பாரதிய கோடி கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி அடைந்துவிட்டது.
169 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீது 169 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இவர்களில் 133 பேர் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டுள்ளனர். போலி வழக்குகளை பதிவு செய்ததற்காக பிரதமர் மோடியும்ல், உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும். பெரும் முதலாளிகளின் 10 லட்சம் கோடி கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. 10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்தற்கு எந்த அளவு பேரம் நடைபெற்றது என்பதை பாஜகவிடம் நான் கேட்க விரும்புகிறேன்.
குஜராத் மக்கள் பதிலடி கொடுப்பர்
அரவிந்த் கெஜ்ரிவாலை துக்ளக் என்று பாஜக அழைக்கிறது. அரசியலில் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஆம் ஆத்மி கண்டிக்கிறது. டெல்லி தேர்தலின் போது கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். பஞ்சாப் தேர்தலில் கெஜ்ரிவாலை காலிஸ்தான் என்று விமர்சித்து டெபாசிட்டை இழந்தனர். தற்போதும் அதேபோன்ற வார்த்தையான துக்ளக் என்பதை பாஜக பயன்படுத்துகிறது. இதற்கு குஜராத் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்” என்றார்.