போதை வழியை விடுத்து நேர்வழியில் இளைஞர்கள் செல்ல வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று காலை கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கெம்பட்டி காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. 800 பேருக்கு ஒரு கழிவறை தான் உள்ளது. எங்களால் முடிந்த வரை கழிப்பறைகளை கட்டித் தருகிறோம். அவற்றை உரிய தூய்மையாக வைத்துக் கொள்வது மக்கள் கடமை.
அம்மன்குளம் பகுதியிலும் கட்சி சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு. சமூகத்துக்கான உறவு.
இந்த பகுதியில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இளைஞர்கள் அது போன்ற தீய பழக்கங்களை கைவிட்டு நேர்வழியில் செல்ல வேண்டும். இளைஞர்களின் நடவடிக்கைகளை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் மீண்டும் நடப்பதற்கு நாங்கள் முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ராஜவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடையே, கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
பெண்களுக்கு விருது: மாலையில், மநீம சார்பில் பெண்களுக்கான மய்யம் விருதுகள் வழங்கும் விழா குனியமுத்தூரில் நடந்தது. பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு கமல்ஹாசன் விருதுகளை வழங்கி பேசும்போது, “மகளிர் சாதனையாளர் விருது ஆண்டு தோறும் வழங்கி வருகிறோம்.
இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக நடித்து இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்திருக்கலாமோ என்று தோன்றியது. பெண்மை பெருமை கொள்ளக்கூடிய பிறவி.
மக்கள் அமைதியாக இருப்பதுதான் பேராபத்து. ரௌத்திரம் பழக வேண்டும். ஓட்டையாவது போடுங்கள். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் பணம் கொடுக்க மாட்டேன். உங்கள் மதிப்பை விட குறைவான பணம் ஓட்டுக்கு வழங்குகின்றனர். அனைவரும் நியாயத்தின் பக்கம் வாருங்கள்” என்றார்.