பெங்களூரு : ”கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதமாற்றம் தடை சட்டம் மற்றும் பசுவதை தடை சட்டம் ‘வாபஸ்’ பெறப்படும்,” என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.கர்நாடகா சட்ட மேலவையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதமாற்றம் தடை சட்டம் மற்றும் பசுவதை தடை சட்டம் வாபஸ் பெறப்படும். கட்டாய மதமாற்றம் தான், சட்டம் இயற்றப்பட்டதற்கு காரணம் என்று அரசாங்கம் கூறியது. ஆனால் அதன் நிலைப்பாட்டை ஆதரிக்கும் எந்தப் புள்ளி விபரத்தையும் முன்வைக்கவில்லை.6 மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், இந்த விவகாரத்தில் அரசிடம் எந்த விபரமும் இல்லை என்று கூறியிருந்தார். பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சட்டத் துறை இந்த மசோதாவை கொண்டு வந்தது.ஊழல் உட்பட பல பிரச்னைகள் இருக்கும் வேளையில், மக்களை திசை திருப்புவதற்காக, இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
மசோதாவின் சட்டபூர்வமான தன்மை குறித்து நாங்கள் கவலை தெரிவித்துள்ளோம். குஜராத், உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேச அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்கள் இங்கும் கொண்டும் வரப்பட்டுள்ளதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.ஆனால் அந்த மசோதாக்கள் அனைத்தும் அந்தந்த உயர் நீதிமன்றங்களாலும், உச்ச நீதிமன்றத்தாலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement