மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம் – பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு

விழுப்புரம்: மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் பாமக போராட்டத்தில் இறங்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பெரியார் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு பாமக தலைவர் அன்புமணி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்கத்தில் இடஒதுக்கீட்டு தியாகிகள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு வந்து 5 மாதங்கள் ஆகியும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சாதி பிரச்சினை இல்லை. சமூக நீதி பிரச்சினை. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை, உரிய தரவுகளுடன் அவசர சட்டமாக சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கரோனா தொற்று தற்போது உருமாறி வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அதிகம் காணப்படும் இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். சில அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சுகாதாரத் துறை அமைச்சர் தலையிட்டு இதை சரிசெய்ய வேண்டும்.

கரோனா பரவலுக்கு பிறகு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயர்வை ஏற்கவே முடியாது. இதில் அரசு சொல்லும் கணக்கு சரியானது அல்ல. ‘நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு’ என அமைச்சர் சொல்லும் காரணம் தவறானது. மின்கட்டணத்தை குறைக்காவிட்டால், பாமக போராட்டத்தில் இறங்கும்.

பெண்களுக்கு ரூ.1,000, மாதாந்திர மின்கணக்கீடு, பழைய ஓய்வூதியத் திட்டம் என தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை. கஞ்சா ஒழிப்புக்கு தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.